அவளை அப்படியே விட்டிருக்கலாம்-கார்த்திகா
என்னை அப்படியே
விட்டிருக்கலாம்!
இலைகளோடு பேசியும்
காற்றோடு மௌனித்தும்
மழை உரசலில்
நனைந்தும் கரைந்து விடுமென்
சர்க்கரைக் கட்டி முத்தங்கள்
இணை யொன்று இல்லாத
இவ்வுலகில் நீ நடை போடல்
பாவமென்று பாசாங்கு ஒழுகியோர்
பச்சோந்திகளின் வாரிசன்றோ?
தேன் வழியும் தழுவல்களில்
நெஞ்சு பொருத்திய ஞாபகம்
இடையில் கை சுழன்றாட
இறுதியாய் இறுகலில் வளைத்தாய்
மீண்டும் ஒரு மயக்கம்!
திரைச் சீலைகள்
நாணி விலகும் நடுநிசியில்
பௌர்ணமியின் கிரணங்களில்
கரங்களோடு சேர்த்தள்ளுகிறாய்......
தழுவலில் உடையும்
வளைகளோடு சேர்ந்து சிதைகிறது
பத்தினித்துவம்..
வளர்ந்த வாழ்வினை
குத்திக் கிழிக்கும்
சொற்களின் இம்சை
இவையாவும் காதலென்று
நீ உளறுவாய் எனின்
நீ கொண்ட வெறி
தீர்வதற்குள் இரையாக்கப்படும்
உன் நாளைய இரவின் சித்தாந்தங்கள்!!