பறிகொடுத்த மனசு

சாரல் மழையில்
ஓலைக் குடிசையின்
சொட்டும் நீர்த்துளியாய்
ஓயாத உன் நினைவுச் சுமைகள்
தூக்கத்தை உருவிக்கொள்கிறது

ஊளைக்காற்றில் படபடக்கும்
வாசல் மூங்கில் கதவாய்
விட்டு விட்டு ஆடுகிறது
சந்தித்த நினைவுச் சிதறல்கள்

நீர் வறண்ட உறைகிணரின்
ஓயாதத் தவளைச் சத்தமாய்
நீயில்லாத உன் பெயரை
வாய்த் தானே முனுமுனுக்கிறது

முன் ஜாமத்தின் முதல் பொழுதில்
ஏதோ வீட்டு வாசல்
கோடாங்கியின் ஜக்கம்மா
நல்ல காலம் சொல்லியது

நெல் வயல் திருடுட்டு எலிபோல
ஆளில்லா எரிக்கரைச் சம்பவங்கள்
அடிக்கடி நினவைச் சுருட்டி
நெஞ்சுக்குள் ஒளிக்கிறது

வாலில்லாத பட்டமாய்,நாம்
சேர்ந்துத் திரிந்த இடமெல்லாம்
நெருஞ்சி முற்செடியாய்
மனசுக்குள் குத்துகிறது !

ஒற்றை மாட்டு வண்டி மணிச்சத்தம் ,
மெல்ல மெல்லத் தொலைவது போல
உன் கால் கொலுசின் ஓசைகள்
வெறுமையின் விலாசமாய்த் தவிக்கிறது !

எல்லைக்காவல் அய்யனார்சாமியும்
என்னைப் போலத்தான்
அடுத்தவனுக்குக் கட்டிக் கொடுத்து
அவளை ஊரே அனுப்பி வைத்த போதும்
வெகு தொலைவில் இன்னும்
வெறித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (25-Sep-15, 9:23 pm)
பார்வை : 659

மேலே