உறங்கும் மிருகம்

என்னுள் தூங்கும்
மிருகத்தையெழுப்ப
எந்த முயற்சிகளும்
எடுப்பதில்லை
எப்போதும்...
அது உறங்கும்
பொழுதுகளிலே
மனிதனாய்
மனம் உணர்வதால்
அதன் எழுச்சிபற்றி
அக்கறையுமில்லை
எனக்கு...
சில...
சீற்றங்களிலும்
ஏமாற்றங்களிலும்
துரோகங்களிலும்
துயில்கலைந்து
அம்மிருகம் வெளிப்பட...
அசுரப்பலத்தோடு வரும்
அப்பிம்பங்களைக்கண்டு
அரண்டுநிற்பேன்
அச்சத்துடன் அந்நொடி...
அப்பொழுதுகளில்
அம்மிருகத்தின்
மறு உறக்கத்திற்காய்
மனம் வேண்டாமல்
அதன் இறப்புநோக்கியே
அசைபோட்டுக்கொண்டிருக்க...
கொஞ்சம்
வேடிக்கை மனிதனாய்
என்னுள் மலர்ந்தேன்
நான்...!
----------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்