வாழ்க நீ எம்மான்
வாழ்க நீ எம்மான்....
======================================================ருத்ரா
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறி கெட்டு....
விடுதலையையும்
கனவு கண்டு
அது தவறி கெடுவதையும்
கனவு கண்டவன் பாரதி.
மணி மண்டபம் கட்டுபவர்களே!
பளிங்கு சிலை வார்ப்பவர்களே!
நூற்றாண்டு தாண்டியும்
அவன் மீது படர்ந்த
நூலாம்படைகளை
தட்டிக்கொண்டிருப்பவர்களே!
அரசாங்க தோரணையின் தோரணங்களை
அரசாங்க வானொளி வானொலிகளில்
ஜிகினாத்தனம் செய்து கொண்டிருப்பவர்களே!
குத்தாட்ட சினிமாக்களில் கூட
மசாலா வானைக்கு
அவன் பாட்டுகளையும்
சொருகிக்கொள்பவர்களே!
"நெஞ்சு பொறுக்குதில்லையே"
இந்த வரிகள் ஒரு நாளும்
உங்களைத் தைத்தது இல்லையா?
உங்கள் அருகே லட்சம் தமிழ்ப்பிணங்கள்
நாறிக்கொண்டிருப்பது
உங்கள் சோற்றுக்குள் தெரிய வில்லையா?
"தேடிச்சோறு நிதம் தின்று" என்று
நீங்கள்
வாக்குகளின் சாக்கடை ஈக்கள் ஆனதும்
உங்களை உறுத்த வில்லையா?
"வீழ்ந்து போவதற்கு"
வெறும் "வேடிக்கை மனிதர்களாக"
மாறிப்போன அவலங்களுமா
உங்களை உயிர்ப்பிக்க வில்லை?
அவன் பாடல்கள் உனக்கு இனி வேண்டாம்.
அவன்
பிணங்களுக்காக பாடவில்லை.
===============================================================