தொழிலாளிகள்

பாடுபட்டு வேலைசெய்ய பயப்படமாட்டோம் - நாங்க
பயன்படாத வகையில்ஏதும் செய்திட மாட்டோம்
பரிதவித்து வாழ்ந்தாலும் கலங்கிட மாட்டோம் - நாங்க
பணத்துக்காக பேச்சைமாத்திப் பேசிட மாட்டோம்

காடுகளை அழித்துபல நாடுகள் செய்வோம் - விளையும்
கழனிகளில் சேறடித்து நாற்றுகள் நடுவோம்
மலைஉடைத்து கல்லெடுத்து மாளிகை யமைப்போம் - கல்லில்
கலைபடைக்க உளியெடுத்து சிற்பமும் செய்வோம்

மாடுகன்று ஓட்டிச்சென்று மேய்ந்திட வைப்போம் - அந்தி
மாலைநேரம் குளங்களிலே குளித்திட வைப்போம்
பால்கறந்து பலபேர்கள் அருந்திட கொடுப்போம் - நாங்க
படும்பாட்டை வெளியில்சொல்ல விரும்பிட மாட்டோம்

பஞ்சடித்து நூலெடுத்து ஆடை பின்னுவொம் - அந்தப்
பட்டுப்பூச்சின் கூடழித்து சேலையும் நெய்வோம்
உப்பெடுக்க கடல்நீரை வெயிலில் காச்சுவோம் - தெருவை
துப்புறவுக் குச்செடுத்து சுத்தமும் செய்வோம்

அரும்பெடுத்து நூல்கொண்டு மாலை தொடுப்போம் - நல்ல
கரும்பினிலே சாறெடுத்து சர்க்கரை செய்வோம்
இரும்பெடுத்துக் காய்ச்சியதில் பலபொருள் செய்வோம் - இருந்தும்
இன்னல்களை சுமந்துதானே பொழுதைக் கழிக்கிறோம்

மண்ணெடுத்து நீர்சேர்த்து பானை செய்தாலும் - எங்க
எண்ணத்தி்லே சூதுவாது சேர்த்திடமாட்டோம்
ஊறுகின்ற வியர்வைவிட்டு நெல்லைவளர்த்து- நாட்டில்
சோறுபஞ்சம் போக்கிடவே விளைச்சல்பெருக்குவோம்

உழைத்துவரும் காசில்தானே உண்டு மகிழுவோம் - நாட்டில்
ஊழல்செய்யும் பெருச்சாலியைக் கண்டு அஞ்சுவோம்
ஊரும்உலகும் உருளுவது எங்க ளாலதான் - மனசில்
உள்ளசோகம் வெளியில்சொல்ல வழியுமில்லதான்

இன்றுமாறும் நாளைமாறும் என்று நம்பியே - நாங்க
இரவும்பகலும் உழைச்சிடுவோம் மனசுவெம்பியே
இழுத்துவிடும் மூச்சினிலே வெப்பம் வீசிடும் - நாங்க
இல்லயின்னா உயர்ந்தக்கூட்டம் வாடிவதங்கிடும்

சீறும்சிறப்பும் ஏதுமின்றி செத்துப் பொழைக்கிறோம் - கேட்க
யாருமின்றி நெஞ்சிகுமுறி நிலையும் குலையிறோம்
நாட்டைஆளும் நல்லவங்க கண்ண தொறக்கணும் - எங்க
நலிவைப்பொக்கி நல்லாவாழ வழிகள் செய்யணும்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (29-Sep-15, 5:40 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 51

புதிய படைப்புகள்

மேலே