பாத்ரூம் செப்பல்ஸ்… கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்

1988களில் அந்த செருப்பின் விலை… பத்து ரூபாய்… அந்த செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில் காத்தன என்றால் அது மிகையில்லை.

வெள்ளை மற்றும் நீல கலர் வார் செருப்பு வாங்கி ஒரு பதினைந்து நாள் கூட தாண்டாது…. செருப்பு அறுந்து விடும்…
கால்ல என்ன அருவாமனையா வச்சி இருக்கே என்று அப்பாவிடம் ஓழ் பாட்டு வாங்கிக்கொண்டு பிஞ்ச செருப்பை கோவத்தோடு பார்த்துக்கொண்டு இருப்போம்…

தரமற்ற செருப்பு… அப்படித்தான் அறுத்துக்கும்..

ஏவனாவது வேணும்ன்னு கால்ல போட்டுக்கிட்டு போற புது செருப்பை பிளேடு வச்சி அறுப்பானா? என்று அப்பாவை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும்… ஆனால் வாயில் இருந்து எந்த வார்த்தையும் வெளிவே வரவே வராது…

அடுத்து ஒரு ஒன்றரை மாதத்துக்கு நரக வேதனை தான்…. செருப்பு தைப்பவரிடன் 50 பைசா கொடுத்தால் தைத்து கொடுப்பார்… ஆனால் எப்போது வேண்டுமானலும் செருப்பு அறுத்துக்கொள்ளும் என்பதால் அரைஞான் கயிற்றில் இரண்டு மூனு சேப்ட்டி பின்னு வச்சிக்கிட்டுதான் சுத்துவோம்…

சேப்ட்டி பின் வார்ல போட்டுக்கிட்டு நடக்கறது போல கொடுமை வேற எதுவும் இல்லை…. இந்த பக்கம் நடந்த அது அந்த பக்கம் இழுத்துக்கிட்டு திரியும்… அவசரமா பஸ் புடிக்க ஓடும் போது சரியா படிக்கட்டு கிட்ட போய் பஸ் கைப்புடி கம்பி புடிக்கும் போது… சேப்ட்டி பின் வாய் திறந்து சிரிக்க…. தடுமாறி பேலன்ஸ் செஞ்சி நிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு போயிடும்… மிக முக்கியமா பொண்ணுங்களை பார்த்துக்கிட்டு ஸ்டைலா நடக்கும் போது வைக்கும் பாருங்க வேட்டு... அது கொடுமையிலும் கொடுமை.

சைடுல பக்கில்ஸ் வச்ச லேதர் செருப்பு அப்போது அது காஸ்ட்லி… ரேட்… 150 இல் இருந்து 200 வரை இருக்கும்…

ஹயர் செகன்ட்ரி படிக்கற வரைக்கும் எனக்கு அந்த வெள்ளை நீலக்கலர் செருப்புதான்… பத்து ரூபாயில் இருந்து 27 ரூபாய் விலையேற்றம் வரை வாங்கி போட்டு நடந்தது எனக்கு நன்றாக நியாபகம் இருக்கின்றது…

அதன் பிறகு மியாமி குஷன் காலனிகள்..விளம்பரம் நம்மை படுத்தி எடுத்து... பாரு பாரு மியாமி குஷன் பாரு... காலுக்கு நல்ல செருப்பு பாரு... என்று விளம்பரத்தில் அஜித் புலுட் வாசித்துக்கொண்டு வருவார். அதன்பின் அதில் நிறைய கலர்கள் வர ஆரம்பித்தன...

அதன் பின் பாராகன் செருப்புகள் வந்தன...

1998 இல்லை சென்னையில் நிரந்தமாக தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது.. ஒரு பிரபலத்தின் வீட்டில் படப்பிடிப்பு… பெட்ரூமின் அட்டாச்டு பாத்ரூம் வாயில் என்னோடு பலகாலம் பயணித்த வெள்ளை நீல கலர் வார் செருப்பு இருந்தது…

பிரேமில்முந்திரிக்கொட்டை போல நீட்டிக்கொண்டு இருக்க… இயக்குனர் சொன்னார்… ஜாக்கி அந்த பாத்ரூம் செப்பலை காலால கட்டிலுக்கு கீழ தள்ளி விடுங்க என்றார்.

அந்த செப்பல்கள் என்னோடு காடு கழனி, கடல் , மலை என்று பயணித்த நாட்களை நினைத்துக்கொண்டேன்…

ஒரு காலத்தில் பெரும்பாலான நடுத்தர மக்களின் கால்களை அலங்கரித்த செருப்பு…தற்போது சென்னையில் கூலி வேலை செய்யும் பீகாரிகள் கால்களில் மட்டும் அதனை காண முடிகின்றது…

யாழினிக்கு தி நகர் பிரமாண்டமாயில் செருப்பு எடுக்க சென்ற போது… யாழினிக்கு செருப்பு 450 ரூபாய் என்று குழந்தை பாசத்தை முன் வைத்து பர்சை காலி செய்ய கலர் கலராய் பல ரகங்களில் செருப்புகள் வியாபித்து இருந்தன… எனக்கு தலைசுற்றியது…

ஆனாலும் கடையில் நான் சேப்ட்டி பின் போட்டு சபித்துக்கொண்டு நடந்த செருப்பினை பல வருடங்கள் கழித்து பார்த்தேன்…

சென்னையில் பணக்காரர்களால் பாத்ரூம் செப்பல் என்று நாமகரணம் சூட்டப்பட்ட அந்த செருப்பின் விலை தற்போது 99 ஒன்பது ரூபாய்…

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஜாக்கிச (29-Sep-15, 8:24 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 144

மேலே