காந்தி அடிகள்

அண்ணல் காந்தி, சிறையினிலே
அடைபட் டிருந்த பொழுதினிலே
கண்ணிய மில்லா மேனாட்டான்
காலணி யுடனே உதைத்திட்டான்
புண்ணியர் பொங்கி வையாமல்
புன்னகை பூக்கள் பூத்தாராம்..
திண்ணிய நெஞ்சம் அவர்நெஞ்சம்
தெளிந்த உள்ளம் அவருள்ளம்
காலனி யிட்ட தண்டனையின்
காலம் முடிந்து வெளிவரும்நாள்
காலணி யுடனே உதைத்தவர்க்கு
காந்தி அடிகள் பரிசளித்தே
காலின் அளவு சரிதானா?
அணிந்து பார்ப்பீர் என்றாராம்
மேலை நாட்டான் அதைவாங்கி
மிடுக்குடன் அணிந்து கொண்டானாம்
”என்னே நேர்த்தி என்காலை
எப்படி அளந்தீர்?” என்றானாம்
தன்நெஞ் சதிலே பதிந்திருந்த
தடத்தைக் காந்தி காட்டினராம்
இன்னா செய்தார் அவர்நாண
இவர்போல் இங்கே எவர்செய்வார்?
அன்னை பூமி அதன்பொறுமை
அண்ணல் காந்தி குணமன்றோ!