ஒருசாண் வயிற்றின் ,,,,இருப்புத் தகுதியில்லாதவன்

ஒருசாண் வயிற்றின் ,,,,இருப்புத் தகுதியில்லாதவன்
================================================
அந்த அறையின் கதவு
எத்தனை தட்டியும் திறக்கவில்லை
நிறைய குடித்திருந்தானே
அவளைத்தான் சபிக்கிறான்போல்
முக சவரம்கூட செய்யமாட்டான்
கட்டையில போனவன்,,,
எல்லோரும் பார்த்திருந்தார்கள்
நிசியின் ஊளையிடுதலுக்கு
அவன் முடிவைப் பொருத்திப்பார்க்கின்றனர்
ஒரு தரப்பினர்
ஒரு பொழுது அணைந்ததும்
அவள் அங்கு வந்துப்போவதாக இரண்டுமூன்று பேர்
கடையடைத்ததும்
கடைத் தெருவின் புரளி
தாடையில் கைவைத்தப்படி
மூட்டைப்பூச்சி மருந்து கேட்டானே என
சைக்கிள் சக்கரத்தில் சுழலுகிறது
ஹோட்டலில் சாப்பிட்டபோது
காரணமின்றி காசுகளைக் கிழித்து
சர்வரைக்கட்டி அழுதானாம்
அவனொரு பக்கம்,,,,
பொட்டிக்கடையில் பீடி வாங்கிய
கணக்குகள் மிச்சமிருக்காம்,,,
ஹே அன்னைக்கு எனக்கு ரோட்ட மறச்சி
லவ் லெட்டர் குடுத்தானே
அவந்தாண்டி,,,
அப்படியா என,, பட்டாம்பூச்சி
ரிப்பன் கட்டிய பேரூராட்சியின் காலேஜ் இளசுகள்
இடுப்பில் அமர்ந்த
மருமகள்கள் குடத்து நீருக்குள்
எத்தனைப் பெண்களை
அவனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்
மன நீச்சக்காட்சி ஓடிக்கொண்டிருக்குமோ ம்ம்,,
கதவை உடைங்கப்பா
ஏதாவது ஆச்சுன்னா யாரிருக்கா
யாரு பண்றது ,,,
ஆங்கிலம் மிளரும் பொக்கைவாய்க் கிழடுகள் என
அன்றைய கண் காதுகளுக்கெல்லாம்
பரபரப்பை இறைத்திருந்தான்
அன்றுவரை அவர்களின் அட்டவணைக்குள்
இருப்புத் தகுதியில்லாதவன்
குடித்துவிட்டு ,,குடல் வேகுகையில்
ஒருசாண் வயிற்றை
இறுக்கிக் கொண்டு கத்தினானே
உண்ண ஏதுமின்றி,,,,ஆம்,,
நீர்க் கொடுக்க தவறியவர்களுக்கு
நன்றி சொன்னான்
அவன் கெட்டுதான் போயிருந்தான்
ஆனாலும் அன்று நல்லவர்கள் வரவில்லை ம்ம்ம்,,
அந்த ஒருநாளில்
அவன் இல்லாமல் ஆகிவிட்டான்
அவனோடு சேர்த்துவைத்த
அவளுக்குள் மட்டும்
ஒரு ஆயுள் இருக்கப்போகிறான்.....
புதையுண்டப்பின்னாலும்
அவன் பிணத்தை
விரல்களால் தோண்டிப்பார்க்க
அவள் இருக்கிறாள்
அவன் பதித்த
இடைவெளியில்லாத முத்தங்களின்
ஆக்ரோஷ காற்றுகொண்டு
அவள் மட்டுமே இருக்கிறாள் ம்ம்ம்,,
அனுசரன்