பன்னாட்டு மருந்து கம்பெனிகள் நாஜிகளின் வாரிசுகள்

நாஜிகளால் மருந்துச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் எதிரிகளின் கைகளில் சிக்கியிருக்கிறோம் என்று உணர்ந்திருந்தார்கள். இந்திய மக்களோ, நம்ம டாக்டர், நம்ம கெவர்மென்டு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது.

ம.பி. மாநில மருத்துவர்கள் குறித்துப் புலன் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு, இம்மாநிலத்தில் மட்டும் 2006-10 காலக்கட்டத்தில் 3307 பேர் மீது நெறிமுறைக்கு விரோதமாக மருந்துப் பரிசோதனை செய்து, பல கோடி ரூபாயைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இம்மாநில மருத்துவர்கள் பலர் பெற்றுள்ளனர் என்று சென்ற ஆகஸ்டு மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சோதிக்கப்பட்ட தடுப்பூசிகள் 6 பழங்குடியினச் சிறுமிகளைக் கொன்ற போதும், தில்லி “எய்ம்ஸ்” மருத்துவமனையில் 49 பச்சிளங்குழந்தைகள் பலியான போதும் இச்சோதனைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன. தற்போது சமூக ஆர்வலர்கள் சிலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிப் பெற்றுள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன.

இந்தூர் அரசு மருத்துவமனையில் ஜான்சன் அன்ட்ஜான்சன், க்ளாக்ஸோ போன்ற பிரபல மருந்து கம்பெனிகள், அரசு மருத்துவர்கள் உதவியுடன் 2000 ஆரோக்கியமான குழந்தைகளிடம் புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய், போலியோ, கருப்பைப் புற்றுநோய் போன்றவற்றுக்கான மருந்துகளைச் சோதித்துள்ளன.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு வயது கூட நிரம்பாத 4142 குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளை செலுத்தி, 42 வகை சோதனைகளை நடத்தி உள்ளனர். இதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு 2031 பேர்கள் இறந்துள்ளர் என்றும், 22 பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதென்றும் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்திருக்கிறது அரசு. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பலமுறை நோட்டீசு அனுப்பியும் இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் வாய்தா வழங்குவதற்குச் சளைக்கவில்லை.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருந்துப் பரிசோதனைகள் எனப்படுபவை அனைத்தும் அறிவியல் ஆய்வின் தேவைக்காகவோ, புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காகவோ செய்யப்படுபவை அல்ல.

எந்த ஒரு நோய்க்கும் மருந்து என்பது குறிப்பிட்டவகை வேதியங்களின் கலவையாகத்தான் இருக்கிறது. ஏறத்தாழ ஒரே அடிப்படை மருந்தை, அதன் வீரியத்தைக் கூட்டியும், வேறு சில வேதியங்களைக் கலந்தும் பல வகையான வணிகப் பெயர்களில் விற்கும் மருந்துகம்பெனிகள், அம்மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு முன்னர், சட்டரீதியான தேவையை நிறைவு செய்வதற்காகச் சோதனைகளை நடத்துகின்றன.

இத்தகைய சோதனைகளின் நோக்கம் கொள்ளை இலாபம்தானே தவிர, அறிவியல் ஆய்வு அல்ல. ஒரு மருந்து உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறும் நாளிலிருந்து 20 ஆண்டுகள் வரைதான் அக்காப்புரிமை செல்லும். காப்புரிமை பெற்ற பின் மருந்துப் பரிசோதனை நடத்தி, பின்னர் சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெறவேண்டும். எனவே, பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது விற்பனைக் காலத்தையும் இலாபத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காகச் சோதனைக் காலத்தை சுருக்குகின்றன.

மருந்து கம்பெனிகளுடைய ஆராய்ச்சி மேம்பாட்டுச் செலவில் 70 சதவீதம் மனிதர்கள் மீதான ஆய்வுக்கானது. இதனைக் குறைப்பதன் மூலம் இலாபத்தைக் கூட்ட முடியும். உதாரணமாக, மருந்துச் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள பிரிட்டனில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 100 பவுண்டுகளை (ரூ.8800) ஆய்வு நிறுவனங்கள் தரவேண்டியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, அதில் பத்தில் ஒரு பங்குகூடச் செலவாவதில்லை. அம்மருந்துகள் பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் நட்ட ஈடு தரவேண்டியிருக்கும். இந்தியாவிலோ அந்தப் பிரச்சினையே இல்லை.

நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்தச் சோதனைகளில், முதல் கட்ட ஆய்வு, மருந்தின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் தாக்குப் பிடிக்கும் திறனைச் சோதிப்பதற்கானது. இது, 8 முதல் 10 ஆரோக்கியமான நபர்கள் மீது நடத்தப்படுகிறது.

இரண்டாவது கட்ட சோதனை, மருந்தின் திறனையும் அதன் பக்கவிளைவுகளையும் சோதிப்பதற்கானது. இது, 100 முதல் 200 நபர்களிடம் சோதிக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டத்தில், 1000 பேர் முதல் 3000 பேர் வரை சோதிக்கப்பட்டு மருந்து வெற்றிகரமாக வேலை செய்கிறதா என்பதையும், அதன் பக்கவிளைவுகளையும் உறுதிப்படுத்துகின்றனர். நோயின் பல்வேறு கட்டங்களிலும், வேறு பல மருந்துகளுடன் சேர்த்தும் இந்த சோதனை செய்யப்படுகிறது.

நான்காம் கட்ட சோதனை என்பது, இந்திய மருந்துக் கண்காணிப்பாளரின் அனுமதி மருந்துக்குக் கிடைத்த பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மருந்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஆய்வாகும்.

இவற்றில் மூன்றாம் கட்ட ஆய்வுதான் மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. அமெரிக்க மருந்து கம்பெனிகள் 2008ஆம் ஆண்டில் ஆய்வுக்காக செலவிட்ட 2,12,446 கோடி ரூபாயில், 69, 022 கோடி ரூபாய், அதாவது சுமார் 33 சதவீதம் இந்த மூன்றாம் கட்ட ஆய்வுக்குச் செலவிடப்பட்டது. இந்த ஆய்வை இந்தியா போன்ற நாடுகளுக்கு “அவுட்சோர்ஸ்” செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்களை பன்னாட்டு மருந்துக் கொள்ளையர்கள் மிச்சம் பிடிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனிகள், சமீப காலமாக அறிமுகப்படுத்துகின்ற புதிய மருந்துகளுக்கான மூன்றாம் கட்ட சோதனையில் 50% இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டதாகவே அவை தெரிவிக்கின்றன.

அவர்களுடைய இந்தத் தேவையை நிறைவு செய்வதற்கு, இந்திய மக்களைச் சோதனை எலிகளாகப் பிடித்துக் கொடுத்து, அதன் மூலம் ஆதாயமடைகின்ற ஒப்பந்த ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.

காண்ட்ராக்ட் ரிசர்ச் ஆர்கனைஸேஷன் (சி.ஆர்.ஓ.) என்றழைக்கப்படும் இந்த அமைப்புகளைத் தொடங்குவதற்கு ஒருவர் மருத்துவராகவோ, மருந்தாளுனராகவோ இருக்கவேண்டியதில்லை; பதிவு செய்யும் தேவையோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இந்த அமைப்புகள்தான் மருத்துவர்கள் துணையோடு இந்திய மக்களைச் சோதனை எலிகளாக்கி வருகின்றன.

நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், மொழி தெரியாத அண்டை மாநில ஏழைகள் ஆகியோரிடம் ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம் என்று பொய்க் காரணங்களைக் கூறி, அவர்களை ஒரு தரகர் கும்பல் அழைத்து வருகிறது. சில ஆங்கில ஆவணங்களில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுடைய உடலில் மருந்துகளை செலுத்தி, பிறகு தேவைக்கு ஏற்ப சில மணி நேர இடைவெளியிலோ, சில நாட்களுக்குப் பின்னரோ இரத்த மாதிரியைப் பெற்றுக்கொண்டு கையில் ஆயிரம், இரண்டாயிரத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பி விடுகின்றனர். என்ன மருந்து, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குச் சொல்வதில்லை. சோதனை எலிகளுக்குப் பணம் தரப்படுவதில்லை என்பது ஒன்றுதான் இம்மக்களுக்கும் எலிகளுக்குமான வேறுபாடு.

சி.ஆர்.ஓ.க்கள் மற்றும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது சோதனைகளுக்கு அரசு மருத்துவமனைகளையேகூடப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நிதி ஒதுக்கீடு இல்லாமல் வாடும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்கின்றனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நோய், மருந்து பற்றிய அனைத்து ஆவணங்களும் மருத்துவத் தொழில் தருமத்துக்கு விரோதமாக விலை பேசப்படுகின்றன.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை வஞ்சிப்பது மருத்துவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளியை இணங்கச் செய்கின்றனர்.

சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 97% பேர் மருத்துவரின் பரிந்துரை காரணமாகத்தான் இதில் கலந்து கொண்டதாகக் கூறியிருக்கின்றனர்.

சோதனைகளுக்குச் சம்மதித்தால் நல்ல மருத்துவம் இலவசமாகக் கிடைக்கும், மருத்துவமனையில் படுக்கை வசதியும் சாப்பாட்டு வசதியும் கிடைக்கும் என்றெல்லாம் மருத்துவர்களாலும், சி.ஆர்.ஓ.க்களாலும் ஆசை காட்டப்பட்ட அப்பாவி மக்கள் பலர், சோதனைகளுக்குத் தங்களை ஒப்புவித்துள்ளனர்.

சி.ஆர்.ஓ.க்களுக்கு ஒத்துழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மாநாடுகள் என்ற பெயரில் வெளிநாட்டு இன்பச் சுற்றுலாக்களும் கேளிக்கை வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

ம.பி.மாநிலம் இந்தூர் எம்.ஜி.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஹேமந்த் ஜெயின் என்ற குழந்தை மருத்துவர் ரூ.75 இலட்சம், நெஞ்சக நிபுணர் சலீல் பார்கவா ரூ.64 லட்சம், இதய நோய் மருத்துவர் அனில் பரணி 65 இலட்சம் என மருந்துச் சோதனையின் மூலம் தாங்கள் வருவாய் ஈட்டியதாக இவர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கின்றனர். பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று, அவ்வளவே.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சிறந்த சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கி, அவர்கள் மீது மருந்துகளைப் பரிசோதிக்கின்றன. இந்தச் சோதனைகளின் முடிவுகளை சி.ஆர். ஓ.க்கள் ஆவணப்படுத்திப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கின்றனர். ஆந்திரப் பழங்குடிச் சிறுமிகள் 6 பேரின் உயிரைப் பலி கொண்ட ’கருப்பைப் புற்றுநோய் மருந்து’ திட்டத்திற்கு நிதியுதவி செய்து நடத்தியது, பில்கேட்ஸின் தன்னார்வ நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தைக் கொட்டியழுது தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை மருந்துச் சோதனைக்கு உட்படுத்தினால், அவருக்குத் தரப்படும் தொகை குறைந்த பட்சம் ரூ.30,000. அதுவே, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் தொடர்பான மருந்துகளுக்கானச் சோதனை என்றால் ஒரு நோயாளிக்கு ரூ.90 ஆயிரம் வீதம் மருத்துவருக்கு வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கிளின்வென்ட் ரிசர்ச், கிளினி ஆர் எக்ஸ் போன்ற சி.ஆர்.ஓ. நிறுவனங்கள் அதிகாரபூர்வமாகவே தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General of India ) எனும் அமைப்புதான் இந்தியாவில் நடைபெறும் இத்தகைய சோதனைகளையும், அவற்றை நடத்தும் சி.ஆர்.ஓ.க்களையும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.

இந்த அமைப்பில் உள்ள வல்லுநர்கள் வெறும் 4 பேர். முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த ஆள் பற்றாக்குறையைப் பராமரித்து வருகிறது அரசு. இவர்கள் செய்யும் விதிமீறல்களோ யாராலும் நியாயப்படுத்த முடியாதவை.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளாக இருப்பினும், அவை இந்திய மக்களின் தேவைக்கும், உடலுக்கும் பொருந்தினால் மட்டுமே இங்கே சந்தைப்படுத்த முடியும். இதற்காக மருந்துக் கம்பெனிகள் நடத்தும் மருந்துச் சோதனைகளையோ, சோதிக்கப்படுபவர்களையோ டி.சி.ஜி.ஐ. ஒருமுறை கூட நேரில் சோதித்ததில்லை. பொதுநலன்(?) கருதி சோதனை தேவையில்லை என்று கூறியும், சோதனையே நடத்தாமல் வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்றும் 2008 ஜனவரி முதல் அக்டோபர் 2010 வரை 31 மருந்துகள் முறைகேடாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கின்றது.

ஆஸ்துமாவுக்கான டாக்சோபைலின், ரத்தம் உறைவதைத் தடுப்பதற்கான ரிவாரோக்சாபான், நுரையீரல் நோய்க்கான பிர்பெனிடோன், ஸ்கிசோபெர்னியா எனும் மனநோய்க்கான செர்டின்டோல் போன்றவை தொடங்கி, எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் மருந்துகள் வரை இதில் அடக்கம்.

ஒரு குறிப்பிட்ட மருந்தைப் பரிசோதிப்பதற்கான திட்டவரைவு உள்ளிட்ட 800 பக்க ஆவணத்துக்கு நாலே நாளில் டி.சி.ஜி.ஐ. அனுமதி அளித்திருக்கிறது என்றும், அதை ஊன்றிப் படிப்பதற்கு தனக்கே ஒரு மாதம் தேவை என்றும் கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் குலாட்டி. இந்தூரில் நடைபெற்ற மருந்துச் சோதனையால் உயிரிழந்த 89 பேர் குறித்த ஆய்வில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தியாவில் மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகளும் 2005ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு விட்டன.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

2005 க்கு முன் இந்தியாவில் பரவாக உள்ள நோய்களுக்கான மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்துக்கும், முதல் கட்ட ஆய்வு இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் முடிந்த மருந்துகளுக்குத்தான் இங்கே இரண்டாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

2005இல் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி கதவைத் திறந்து விடுவதற்காக “டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் ரூல்ஸின் செட்யூல் ஒய்” திருத்தப்பட்டது. வெளிநாட்டில் ஒரு மருந்தை விலங்குகள் மீது பரிசோதித்து, அந்தப் பரிசோதனை முடிவுகள் அடங்கிய காகிதத்தைக் காட்டி, டி.சி.ஜி.ஐ. இன் தலையிலடித்து ஒரு ஹிப்போகிரெடிக் சத்தியத்தையும் செய்து விட்டால், இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியர்கள் மீது நடத்திக் கொள்ளலாம் என்றும், அந்த ஆவணங்களை ஆராயத் தேவையில்லை என்றும் விதிகள் திருத்தப்பட்டன. உடனே ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் மனிதக் கசாப்புக் கடைகளாக இந்தியாவெங்கும் முளைத்தன.

இதற்குப் பிறகுதான் போபால் விசவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது, அவர்களுக்கே தெரியாமல் இதய நோய் மருந்து முதல் மயக்க மருந்து வரையிலானவை சோதிக்கப்பட்டன. இந்தூரில் 233 மனநோயாளிகளின் உடம்பில் பல்வேறு மருந்துகள் சோதிக்கப்பட்டன. இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உடல்களை, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சோதனைக் களமாகத் திறந்து விட்ட யோக்கியர் அன்புமணிதான், இன்று மக்களைக் கொல்லும் மதுக்கடைகளைப் பூட்டப் போகிறாராம்!

மருந்துச் சோதனையால் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளானவர்கள் அது பற்றி புகார் செய்யும்போது, எங்கள் மருந்தால்தான் இந்த பாதிப்பு என்று நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுகின்றன, மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள். அரசு உதவி பெறும் மருத்துவமனையான போபால் நினைவு மருத்துவமனையிலேயே போபால் மக்கள் மீது சோதனை நடத்தப்பட்டது பற்றித் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரம் கேட்டதற்கு, தர முடியாது என்று பதிலளித்திருக்கிறது அம்மருத்துவமனை. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் நோயாளிகளுக்கேகூடத் தனியார் மருத்துவமனையில் தரப்படும் மருந்துகள், சோதனைகளின் முடிவுகள் ஆகியவை ரகசியமாக்கப்படுகின்றன. தவறான அலட்சியமான சிகிச்சையால் பாதிக்கப்பட்டது கண்கூடாகத் தெரிந்தாலும், நிரூபிக்கச் சொல்லி சவால் விடுகிறார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.

தன்னை நம்பி உயிரையே ஒப்படைக்கின்ற ஒரு நோயாளியின் உடலை மருந்து கம்பெனிக்கு விலைபேசும் இவர்கள், கூலிப்படைக் கொலையாளிகளை விடக் கொடியவர்கள். ஆனால் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களைத் தண்டிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. ம.பி. மாநிலத்தில் மனநோயாளிகள் மீது அவர்களுக்குத் தெரியாமலேயே மருத்துவ சோதனை நடத்திய 12 அரசு மருத்துவர்களுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டும் அபராதம் விதித்திருக்கிறது அம்மாநில அரசு. ஏனென்றால், இதைக் கிரிமினல் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க சட்டத்திலேயே இடமில்லை.

மருந்துச் சோதனைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதைக் கண்ட ம.பி.யைச் சேர்ந்த மருத்துவரானஆனந்த் ராய், இது தொடர்பாக ஒரு ஆணை பிறப்பிக்கக் கூடாதா என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டார். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சட்டம் இயற்றுவது எங்கள் வேலை அல்ல என்று கறாராகக் கூறிவிட்டனர் நீதிபதிகள்.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

சர்வதேச மருந்துச் சோதனைத் தொழிலின் ஆண்டு மதிப்பு 1,56,870 கோடி ரூபாய். இதில் 15% சந்தையை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றி விட்டதாகக் கூறுகிறது மெக்கின்சி நிறுவனம். மீதி 85 சதவீதத்தையும் கைப்பற்றுவதற்கு ஒரு விபச்சாரத் தரகனைப் போல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு வலை வீசுகிறார், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்.

வாருங்கள். 5 இலட்சம் மருத்துவர்கள், 160 மருத்துவக் கல்லூரிகள், ஆங்கிலம் பேசத் தெரிந்த மருத்துவப் பட்டதாரிகள், 7 வகையான மனித மரபணு வகைகளில் 6 வகைகளை உள்ளடக்கிய 100 கோடி மக்கட்தொகை, மேலை நாடுகளைப் போலன்றி மருந்துகளால் களங்கப்படாத 100 கோடிக்கும் மேற்பட்ட பச்சை உடம்புகள்; வாருங்கள், உங்கள் மருந்துச் சோதனைகளை இங்கே தொடங்குங்கள் என்று மருந்து கம்பெனி முதலாளிகளின் கையைப் பிடித்து இழுக்கிறார் அவர்.

பி.பி.ஓ. க்களும் ஆலைகளும் மலிவான இந்திய உழைப்பை விற்கின்றன. சி.ஆர்.ஓ.க்கள் இந்திய உடலும் மலிவுதான் என்று கூவுகின்றன. நாஜிகளால் மருந்துச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் எதிரிகளின் கைகளில் சிக்கியிருக்கிறோம் என்று உணர்ந்திருந்தார்கள். இந்திய மக்களோ, நம்ம டாக்டர், நம்ம கெவர்மென்டு என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - வினவு (1-Oct-15, 10:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே