சொல்லத்தான் நினைத்தேன்
உன்னை சந்திக்கத்தான் உன் வீட்டிற்கு வந்தேனென்ற உண்மையை சொல்லியிருப்பேன்,
நீ ரகசியமாய் குடிப்பதற்கு
தேநீரை மீதம் வைத்திருப்பேன்,
கொலுசின் ஓசை ஓர்
அழைப்பென்று உணர்ந்திருப்பேன்,
எனக்கு பிடிக்காத உன் புதுசுடிதார் கரித்துணி
ஆனதின் ரகசியம் புரிந்திருக்கும்
என் கைபிடித்தலுக்காகவே சாலையை
மெதுவாய் கடக்கும் உன்னை திட்டியிருக்கமாட்டேன்
ஒரு பெண்பார்த்தலில் உன் முகத்தில் குடிகொண்டது சிரிப்பல்ல,,
இன்னும் என்னை புரியவில்லையா?
என்ற விரக்தியை கண்டுபிடித்திருப்பேன்
கல்யாணத்திற்கு முதல் நாள்
என் சட்டை பிடித்து மார்புதைந்து, உடைந்து,
கதறி அழுது, என்னை கூட்டிசென்றுவிடு எனும் உன்னை,
தேற்ற முடியாத கையறுநிலையில்,
உன்னை அநாதரவராக விட்டுச் சென்றிருக்கமாட்டேன்
நான் வருவேனென, கெட்டிமேளசத்தம் வரைக்கும்
காத்திருந்த உன் கண்ணீர்த்துளியை,
ஆனந்தமென்று யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள்,
உன்னப்பனிடம் சண்டை போட்டிருப்பேன்
இவள்தான் வேண்டும் என்று பிடிவாதமாய் நின்றுருப்பேன்
முடியாதென்றால் இருதலைகொள்ளி எறும்பாய்,
நீ வாழவேண்டாமென்று உன்னை கொன்றிருப்பேன்
என் அத்தை மகளே உனை கைவிட்டிருக்கமாட்டேன்
இன்று மீண்டும் உனை அழவைத்திருக்கமாட்டேன்.