சொப்பனத் தேவதைக்கு - சந்தோஷ்

விம்மிய கொங்கையுடைய
வாழைத்
தண்டுத் தொடையுடைய
கயல்
கெண்டை விழிகளையுடைய
சேவல்
கொண்டை நிறத்தழகியினை
கண்ட சொப்பனத்தினால்
பொங்கியெழுந்த மோகத்தில்
மயங்கியெழுதினேன்
சொந்த மொழியில்
சந்த ஒலியில்
இந்தக் கவிதையை..!

---
குமுதச் செவ்விதழில்
புன்னகைச் சிந்துகிறாள்.
அமுதப் புன்னகைச் சிந்துகிறாள்.

மில்லியளவு இதழ்விரித்து
மல்லிப்போல பல்லைக்காட்டி
கள்ளியவள் காதல்
கொள்ளி வைத்து
எள்ளி நகையாடுகிறாள்.
எனை எள்ளி நகையாடுகிறாள்

ஓ...பிரம்மனே.. பிரம்மனே...!
கொல்லுதய்யா எனைக்
கொல்லுதய்யா அவள்
மெல்லிடைதானய்யா..!

கொள்ளுமய்யா எனக்கு
கொள்ளுமய்யா அவள்
மெல்லிடையும் எந்தன்
விரலிடையில் கொள்ளுமய்யா..?

ஒ..! கம்பனே.. கம்பனே...!
தள்ளுதய்யா எனக்கு
தள்ளுதய்யா அவள்
அன்னநடையும் பின்னழகும்
சின்ன இடையும் முன்னழகும்
கண்டவுடன் தள்ளுதய்யா
எந்தன் எழுதுகோலும்
கவியெழுதி தள்ளுதய்யா..!

ஓ... பாரதியாரே...! பாரதியாரே...!
தாக்குதய்யா எனை
தாக்குதய்யா..அவள்
வெண்ணிற விழியிரண்டோடு
கருநிற முழிகளோடு
பாவையவள் பார்வையொளி
பாற்கடல் சூறாவளியாய்
எனைத் தாக்குதய்யா...
பாவியெனை தாக்குதய்யா..!
--
அடியே... அழகே...!
கரைத்தெரியா இன்பக்கடலில் உன்னன்புக்கு
கலங்கரைத் தேடும் ஓடம் நானே..!
உறையற்றஎந்தன் மன்மதவாளுக்கு
உறைவிடம் தரும் கூடும் நீயே..!

காதல்
வண்ணத்தைத் தேடி
மயிலே நீ வா.! -என்
எண்ணத்தை அறிந்து
குயிலே நீ வா- அன்பு
சின்னத்தைப் புரிந்து
இரயிலே நீ வா...!


**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (1-Oct-15, 11:25 pm)
பார்வை : 97

மேலே