சலிப்பு
.................................................................................................................................................................................................
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில்
வானம் தோன்றக் கூடாதா.. ?
சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று
நிலவு வளரக் கூடாதா?
கொக்கரக்கோ எனக் கூவிடும் சேவல்
பெயர் சொல்லி எழுப்பக் கூடாதா?
வடக்கில் தோன்றி தெற்கில் மறைந்து
வான்மணி சுடர் விடக் கூடாதா?
பூவில், கனியில் வீடுகள் கட்டி
புகுந்து புறப்படக் கூடாதா?
பனித் துளிக்குள்ளே ஏறி அமர்ந்தால்
பட்டுப்பூச்சிகள் இழுக்காதா?
கதவைத் திறந்தால் கடலலை வந்து
முகத்தில் மோதக் கூடாதா?
படியில் இறங்கி கால் வைத்தால் அது
பால்வழித் திரளில் முடியாதா?
பெரியவரெல்லாம் குழந்தைகளாகவும்
குழந்தைகள் நொடியில் பெரியவராகவும்
மாற்றம் கொள்ளக் கூடாதா?
உணவு தயாரித்து நாம் பரிமாற
பயிர் பச்சைகள் உண்ணாதா?
புதுப்புது உடைகள் மாற்றுதல் போலே
புது உடல் அணிய முடியாதா?
புதுப்புது நாளில் புதுப்புது எண்ணம்
புதுப்புது செயலாய் மாறாதா?