தனிமையில் சிந்திய வரிகள் - சந்தோஷ்

இது இரவல்ல
என் தனிமையின் நிழல்..!
--------------------------------------------
தனிமைக்கு நிர்வாணம் கூட
ஒரு நிவாரணமே....!
----------------------------------------
புகைத்தால்
புற்றுநோய் வரும்
கவிதையும் வரும் எனக்கு...!
--------------------------------------------

-------------------------------------------
தெற்கு தெருவில்தான்
பற்றி எரிகிறது
சமூக அவல நெருப்பு.
காத்திருக்கிறேன்.
என் வீட்டில் வந்து
எரியும் வரை...!
அதுவரை
நானும் ஒரு பொதுஜனமே..!
-------------------------------------------
இந்நாட்டில் நானொரு
மாபெரும் ஜனநாயகப்
பிழை....!
-------------------------------------------
குப்பைகளை
தயவுசெய்து குப்பைத்தொட்டியில்
போடுங்கள் தோழர்களே...!
ஏனெனில்
குப்பைத்தொட்டியே
காகங்களுக்கு
அட்சயப்பாத்திரமாம்...!
----------------------------------------------

கூவம் நதியும்
புனித நதிதான்
பன்றிகளுக்கு..!
-------------------------------------------
உன்னால அடிக்க முடியாமல்
செருப்பால அடிப்பேன் என
ஏனடா கொக்கரிக்கிறாய் கோழையே”
வீரமாய் கேட்கிறது செருப்பு.
-------------------------------------------
மீண்டும் மீண்டும்
பாவங்கள் அண்டாதவாறு
துடைத்துக்கொண்டுதான்
இருக்கிறது.
கடற்கரையில் கடலலைகள்.
தொடந்து பதிவுச்
செய்துக்கொண்டுதான் இருக்கின்றன
மனிதப் பாதங்கள்..!
--------------------------------------------

அதிகாலையில் மெரீனா
*********************
பசியெடுக்க ஒடுகிறது
ஒரு கூட்டம்.
அங்கே..
பசித்தீர்க்க ஓடு ஏந்துகிறது
ஒரு கூட்டம்.

--------------------------------------------
”உங்களுக்கு
வண்ணமயமான எதிர்காலம்”
என்றார் ஜோசியர்.
வாய் விட்டு
அர்த்த சிரிப்பு சிரித்தார்
பார்வையற்றவர்...!
--------------------------------------------
ஓ..! மனிதர்களே ..!
தூண்டி விடுங்கள்
காதல் ஜோதி..!
அணைந்துவிடும்
ஜாதி வெறி..!
-------------------------------------------
கைத்தடியையும்
மூக்குக்கண்ணாடியும்
அருகருகே வைத்து
என்ன என கேட்டேன்.
காந்தி என்றது பள்ளிக்குழந்தை
நூறு என்றான் அரசியல்வாதி.
-------------------------------------------
-----------------------------------------------
திரைகதையில்
அடுத்தென்ன எழுதப்பட்டிருக்கும்?
தெரியவில்லை
இருந்தும் நடிக்கிறேன்
இந்த வாழ்க்கையில்... !
------------------------------------------
உறக்கம் வருகிறதா?
மரணம் வருகிறதா?
தெரியவில்லை.
சொல்ல மறுக்கிறது
கொட்டாவி..!
--------------------------------------------
பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்
வாழ்க்கை என்பது.....
ஒன்றுமே இல்லை..
மரணப் பாதை.

----------------------------------------

புறக்கணிக்கப்பட்ட
ஒரு கவிஞன் கதறுகிறான்.

ஓ! மனிதர்களே...
என் மரணத்திலாவது
எனை வாசிப்பீர்களா
உங்கள் கண்ணீரால்..!

--------------------------------------------

-இரா- சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (3-Oct-15, 6:48 pm)
பார்வை : 3965

மேலே