pooazaki

___பூவழகி ___

அது வெவரம் தெரியாத வயசு
இப்பவும் மனசுக்குள்ள தெளிச்சு வைக்கும் வைகையாத்து தண்ணிய..

அங்க என்னடி ஆம்பள பய கூட திரியுர

இதோ வரேன் ஆத்தான்னு..

பாவடையில எடுத்து வந்த சீனி கிழங்க எரிஞ்சுட்டு ஓடுவ..

ஏன் சோட்டு காரனுங்களாம் என்ன மொறைக்க
பங்குனி மாச வேப்பம் பூவாட்டம்
என்ன மட்டும் கண்ணால அடிச்சு போவ...

என்னதான் உன் அப்பனும்
ஏன் பெரியாத்தாவும் கூட பெறந்தாலும்
நான் உனக்கு
இரண்டாவது மாமன் தான்...

நாமா ஜோடிய போகும் போதெல்லாம்
நம்மள தான் பார்த்துட்டே நிக்கும் அந்த ஒடஞ்ச மட மீன் கொத்தி...

தட்டான் பிடிக்கும் போது மாமா பாம்புன்னு ஓடியாந்து கட்டிபிடிச்ச...

அதுக்காகவே நான் பாம்புன்னு சொல்லுவேன் அடிக்கடி..
தங்க பாறைக்கு விறகு பெறக்க போனது..

மணமேட்டுல இலந்தபழம்
பெறக்குனது..

எல்ல கோயில் பூசாரிகிட்ட
எப்போ கல்யாணம் ஆகும்னு குறி கேட்டது...

எல்லாம் செவகாட்டுக்குள்ள
பாஞ்ச புது கொளத்து தண்ணி போல ஈரமாதான் கிடக்கு புள்ள
மனசுக்குள்ள..

ஆத்துக்கு துவைக்க வந்தவ வயிறு வலிச்சு வீட்டுக்கு போய்டான்னு நான் கேட்டு பதற.

ஓன் மாமான் மவ பெரிய மனிசியா ஆயிட்டான்னு கருப்பாயி கிழவி சொல்ல
ஓடியாந்தேன் பிடிச்ச மீன ஆத்துலவிட்டுட்டு...

ஓன் ஆத்தா வாசபடியில இருக்க
வாச கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னு பார்த்த
இத்தனநாளா ஒளிச்சு வச்சிருந்த வெக்கத்தோட.

தாய்மாமன் குடுச கட்ட
உனக்காக பச்ச ஓலை வெட்டி பிண்ணி கொண்டாந்தேன்
...
எனக்கு முன்னாடியே உன் தாய் மாமன் மண்ணுமுன்டி கட்டிவைக்க
வெறும் கையா நின்ன என்ன ஏக்கத்தோட பார்த்த

மார்கழி மாச நிலா மேகத்துக்கு பின்னாடி இருந்து
பாக்கறது போல
குடுசுகுள்ள இருந்து..

பெரிய கிழவன் இழுத்துட்டு கிடக்க

காடு காரைய பங்க சொல்லி குடிகார சித்தப்பன் சண்ட போட
சனியனா
வந்து நின்னுச்சு அந்த வடக்கு துண்டு வரப்பு..
உன் ஐயனுக்கும், ஏன் ஐயனுக்கும் சண்ட வந்து
பஞ்சாயத்து பேசி முடிச்சு

அந்த ஒத்த கொடிக்க மரத்தோட
வெட்டியாச்சு சொந்தங்கள..

யாருக்குமே தெரியல புள்ள நம்ம
ஆலமரத்துல விழுது ஊண்டிருக்குன்னு..
சொந்த பந்தம் பிரிஞ்சாலும்
நம்மள பிரிக்க முடியாது ன்னு சொன்ன புள்ள..

மேற்க்க சூரியன் விழவும்
நாமா பார்த்துக்கிற
வைக்க படப்புகிட்டதான்

பொழுது விழுந்தும்
அடையவராத
சேவல தேடி வந்த
உன் ஆத்தா
நம்மள பார்த்துபுட்டு
எழவு எடுத்த
வீட்டுல உனக்கு சகவாசம் கேக்குதோ
சனியனே ன்னு
அடிச்சு
இழுத்துட்டு போக

எதுவும் பேச முடியாம
செல போல நின்னேன்

ஆத்தா

கையில சூடு வச்சுட்டுச்சுன்னு
மருநா அரளி ஓடையில பார்க்கும் போது
நெஞ்சில சாஞ்சு முத்து முத்தா உதுத்தையடி உன் கண்ணீர
மாமா யாரு எதுத்தாலும் இந்த உசுரு உனக்குதேன்
என்ன எங்கயாச்சும் கூட்டிட்டு போய்டு
ஏன் ஆத்தா நம்மள சேர விட மாட்டா மாமான்னு சொன்ன
அரளி பிஞ்சு உதிர்ந்து கிடக்க
நாம நடந்து போனாம்

இரண்டு வருசம
மழ தண்ணி இல்ல சம்சாரிக எல்லாம்
காணு தோண்ட கேரளாவுக்கு போய்டாக
வீட்டுக்கு வந்த ஏன்ட
ராசா குழுமைக்குள்ள இருந்த முக்குருனி கம்பும் ஆயுபோச்சு..

விதைக்கு வச்சதையும் எடுத்தாச்சு
மழ தண்ணியில்லாம
கிடக்குயா வத்தாதா ஒண்டி கரட்டு தாமர சொனையும் வத்தி போச்சு..

நாளைக்கு சாமி வீட்டு தெருவுல உன் சோட்டு பயலுக
மலைக்கு வேலைக்கு போராகளாம்...

ஆடியில மழ வரும்னு அம்மச்சியம்மா வந்து குறி சொல்லிருக்கு..
அது வரைக்கும் நீ போய்டு வாயா வெதப்புக்குளாம் வந்துடலாம்.
நானும் ஓன் ஐயனும் இருக்குற கூலி வேல பாத்துட்டு இங்க கிடக்குறம்..
அடக்கு பானைகுள்ள துட்டு இருக்கு எடுத்துட்டு போ ராசா..
வர ஆவணி ல அந்த கழுதய நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்துடலாம்யா..

ஆத்தா இருக்கேன்
பயப்படாதயா..

ஒரு வார்த்த அவட்ட சொல்லிட்டு வந்துடுரேன்..

உப்பு கொணத்துகிட்ட வந்து என்ன மாமா என்ன விட்டு போரியாக்கும்

இல்ல புள்ள வெதப்புக்குளாம் வந்துடுவேன்..

ஆவணி ல உன் கழுத்துல மஞ்ச கயித்த கட்டிடுவேன் புள்ள ஆத்தாவும் சொல்லிடுச்சு அது வரைக்கும்

நெனப்ப மட்டும் வச்சுக்கோ புள்ள

நெஞ்சுல சாஞ்சு என் நெஞ்ச கண்ணீரால கழுவி விட்ட..
நிறுத்த முடியாத உன் கண்ணீர
தலையில முத்தம் குடுத்து நிறுத்தி வச்சேன்

இந்த புள்ள நீ கேட்ட கருகுமணி
நான் கழுத்துல மாட்டிவிட
தாலியா நெனச்சு கண்ணுல ஒத்திக்கிட்ட

ஓன் ஆத்தா தேடும் நீ போய்வா புள்ள

இடுப்புல வச்சிருந்த 5 ரூவாய எடுத்து
கையில திணிச்ச
பத்தரம போய்டு வா

ஓன் உசுரு இங்கதேன் இருக்கு

நீ வர வரைக்கும் காத்தெல்லாம் நம்ம பேர சொல்லிட்டே இருப்பேன்

உனக்கு அது கேட்டுட்டே இருக்கும்
மாமா
கோட்ட கருப்பு மேல சத்தியம்
உனக்கு இல்லாத இந்த உசுரு மண்ணுக்கு தான் மாமா

கிறுக்கி மாதிரி பேசத நான்தேன்
வந்துடுவேன் ல
நாலு மாசத்துல

கூட்டு வண்டி கண்ணு மறையுற வரைக்கும்
வத்தி போன
வைகையாத்த
கண்ணுல ஓட விட்டு நின்ன...

உன் நெனப்புல குழி தோண்டையில கடப்பாரை ய கால்ல போட்டுக்கிட்டேன்
மாமான்னு ஓடி வர நீயும் இல்ல,
ராசான்னு கட்டு போட ஆத்தாவும் இல்ல..
அலுப்பா படுத்துக் கெடந்தாலும்
தவறாமா கெனாவுல
வந்துட்டு போய்டுவ

நாலு மாசம் நாலாயிரம் வருசம் போல போச்சு புள்ள..

ஊர்காட்டுல மழ பெய்ய ஆரம்பிச்சுருக்டா

விதப்புக்கு போகனும் வாங்கடா போகன்னு பெரிய சாமி கிழவன்
சொல்லவும்
மருநா வே கிளம்பி வந்தோம்..
வரும் போதே கூட்டு சந்தையில

உனக்கு பிடிச்ச
சாந்து பொட்டும்,
கருகுமணியும்,
ஆத்தாவுக்கு
கருப்பட்டி பலகாரமும் , ஜயாவுக்கு சுருட்டும் வாங்கி துண்டுல முடிஞ்சுகிட்டு
குறுக்கு பாத வழி பட்டி வந்து ஆத்த கடந்தேன்
மழ பேஞ்சு பூமியெல்லாம் சிரிச்சு கிடக்க

உள்ளுகாட்டு மொத மழைக்கு செவகாட்டு தண்ணியெல்லாம்
ஆத்த பரசி ஓடிகிட்டு இருந்துச்சு..

ஊருக்குள்ள வந்த என்ன ஊரே
வாயான்னு சொல்ல
தல கவந்து போன உன்
அப்பன கடந்து..

ஏன் வீட்டு தெருவுல நடந்து போனேன்

தாய பார்த்த கண்ணுக்குட்டி போல
ஏன் ஆத்தா ஓடி வந்து கைய புடிச்சு எப்டியா இருக்கன்னு அழ ஆரம்பிச்சிட்டா

குழிச்சுட்டு வாயான்னு கொல்லையில தண்ணி வைக்க

குழிச்சுட்டு வந்த
எனக்கு
ஆவி பறக்க
நாட்டுக்கோழி கொழம்பு வச்சு நல்லெண்ணெய் ஊத்தி

பசியோட இருந்த எனக்கு

உருண்ட திரட்டி கையில குடுதுச்சு

என்னயா இது துண்டுல

உனக்கு தான் பலகாரம்

ஐயாவுக்கு சுருட்டு..

இது என்னயா சாந்து பொட்டு

அவளுக்குதேன்

அவள பாத்தியா

எப்படி இருக்கா?
பேசுனியா

இன்னும் அவக ஆத்தா வீம்பு பிடிச்சிக்கிட்டு தான் திரியுதா..

நான் கேக்க கேக்க

ஆத்தா எதுமே சொல்லாம
கறிய எடுத்து போட்டுக்கிட்டே இருந்துச்சு..

எலைய மடிச்சு வச்சுட்டு

சாந்து பொட்டையும், கருகுமணியையும்
எடுத்து இடுப்புல சொருக

எங்க ராசா போர ஓன்
மருமகள பார்க்கதேன்..

அவ இருந்த தானய்ய பாப்ப அவளதேன் அரளி வித திண்டுருச்சே

நாய்க்கரு கொளத்து கரையில
மண்ணுக்குள்ள
தூங்கி கிடக்காயா.

தலையில இடி விழ
கண்ணுல கடலுவர
ஊமையா சரிஞ்சு விழுந்தேன்..

நீ மலைக்கு போனதும் மண்ணுமுன்டி க்கு கட்டிவைக்க பருசம் போடவும்

புழுவா துடிச்சாயா யாருமே கேக்கலய அவ பேச்ச

விடுஞ்சா கல்யாணம்ன்னு ஊரே பேசி நிக்க..

அரளி வித திண்டுபுட்டு
என்ன பார்க்க வந்தாயா
மாமா வரவும் சொல்லிடு
மாமாவ பத்திரமா பாத்துக்கோன்னு
செல்லிக்கிட்டே
ஏன் ராசா
உனக்கு உனக்காக வரம் வாங்கி வந்த புள்ள

பாதியிலேயே போய்டான்னு
ஆத்தா
ஒப்பாரி வைக்க

பொனமா வந்து இரண்டு நாளா கிடந்தேன் உன் குழி மேட்டுலயே..

கஞ்சி குடிக்காம, வீட்டுக்கு போகம
காடெல்லாம் திரிஞ்சேன்..

அரளி வித திண்ட என்ன வைத்தியச்சி காப்பாத்தி திரும்ப திரும்ப
உயிரோட சாகவச்சா...

உன் நெனப்பா ஜமீன் சாமாதியிலையும்,
ஒடஞ்ச மட பக்கத்துலையும்,

அந்த ஒத்த
பனைக்கிட்டையும்
உயிருள்ளாம கிடந்தேன்.

கிருக்கு பிடிச்சவனா,
செத்த பொனமா
திரிஞ்ச எனக்கு
வருசம் இரண்டாச்சுன்னு
எப்படி தெரியும் நீ போன பிறகு.

ஆத்தா என்ன நெனச்சே உயிர கொரச்சுட்டா
.. ஐயாவும் ஆத்தாவுக்கு வைத்தியம் பாத்தே தேஞ்சுடுச்சு

அன்னைக்குதேன் வீட்டுக்குள்ள
வாரேன்

ஆத்தாவ அப்டி பார்க்க பொறுக்காமா
என்று
மறுபடியும் அழுது விழுந்தேன்..

படுக்கையில கிடக்க ஆத்தா ஏன் கைய பிடிச்சு நான் சொல்டரத கேளு ராசா..
அவள மறந்துட்டு
உன் சின்ன அத்த மகள கட்டிகோயா இது இந்த ஆத்தா மேல சத்தியம்ன்னு
கைய எடுத்து தலையில வச்சுடுச்சு ஆத்தா..

ஆமா பொம்பளைக தான் உண்மையா சத்தியம் பண்ணா மாற மாட்டீகளே..

இந்த பொனத்துக்கு வம்புடியா
உயிர கொடுத்தா ஏன் ஆத்தா அவ சாக போகும் போது...

நான் தான் புள்ள உன் சத்தியத்த தொலைச்சுபுட்டு

ஆத்தா சத்தியத்த வாங்கிகிட்டேன்..

திண்ணையில சாஞ்சு இருந்த
என்ன
ஏன் தாத்தா அழுவுற

உன் மக பூவழகி
ஐஸ் வங்கி தரமாட்டுது தாத்தா
நீ வாங்கி தாயேன்

கைய பிடிச்சு இழுத்தது

என் மகபுள்ள பேத்தி.

ஆமா பூவழகி,
உன் பேரும்
நெனப்பும்
இன்னும் நெரஞ்சு தான் கிடக்கு புள்ள

இந்த பாவி பய நெஞ்சுக்குள்ள.....

மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : (7-Oct-15, 8:11 pm)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
பார்வை : 131

மேலே