ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல கவிஞர் இரா இரவி

ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல !
கவிஞர் இரா .இரவி !


மன்னார்குடியில் பிறந்த கோபிசாந்தாதான் !
மாநிலம் போற்றும் மனோரமா ஆனார் !

பாத்திரத்தின் பெயரே பெயராக நிலைத்தது !
பள்ளத்தூரில் வளர்ந்து தமிழ் கற்றவர் !

நாடகத்தில் நடித்து புகழ் பெற்றவர் !
நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர் !

திருமண வாழ்க்கை நீடிக்கா விட்டாலும் !
திரைப்படத்தில் சோகம் காட்டாதவர் !

அன்று நடிகை என்றால் சில ஆண்டுகள் மட்டுமே !
அய்ந்து தலைமுறை நடித்துச் சாதித்தவர் !

அய்ந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை !
ஆயிரத்து முன்னூறு படங்களில் நடித்தவர் !

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி மட்டுமல்ல !
தோழியாக சிங்களப் படத்திலும் நடித்தவர் !

பத்மஸ்ரீ கலைமாமணி விருதுகள் மட்டுமல்ல !
புதியபாதை படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் !

தில்லானா மோகனாம்பாளில் முத்திரை பதித்தவர் !
தில்லாக நடித்து சாதனைகள் பல புரிந்தவர் !

கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தவர் !
கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைத்தவர் !

பெண்சிவாஜி என சோவால் பாராட்டப்பட்டவர் !
பெண்ணின் திறமையை பறை சாற்றியவர் !

சகலகலா வல்லியாக வலம் வந்தவர் !
சந்தோசமாக பாடல் பல பாடியவர் !

டில்லிக்கு இராசனாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே !
சென்னை மொழியிலும் பாடல் பாடி அசத்தியவர் !

இனமுரசு சத்தியராஜ் அவர்களுடன் நடிகனில் !
இனிய போட்டியிட்டு நடித்துக் காட்டியவர் !

ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை !
ஆணாதிக்க திரை உலகில் கொடியை நாட்டியவர் !

பெரியார் படத்தில் அன்னையாக நடித்தவர் !
பெரிய நடிகர்களும் அஞ்சும் வண்ணம் நடித்தவர் !

பழம் பெரும் நடிகை மட்டுமல்ல இவர் !
பலம் மிக்க பன்மொழி நடிகையானவர் !

நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவர் !
நடிப்பில் பல புதுமைகள் நிகழ்த்தியவர் !

அன்றைய முதல்வர் அண்ணா தொடங்கி !
இன்றைய முதல்வர் வரை உடன் நடித்தவர் !

எழுபத்திஎட்டு வயது உடலுக்குத்தான் !
எண்ணிலடங்கா வயது உன் புகழுக்கு !

ஆச்சி என்று அன்பாக பலர் அழைத்தனர் !
ஆட்சி செய்தார் திரை உலகில் தனி ஆளாய் !

அவருடைய இடத்தை நிரப்ப வேறு யாருமில்லை !
அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது உண்மை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Oct-15, 12:55 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 118

மேலே