தற்கொலையினம் - சந்தோஷ்

இந்நூற்றாண்டின்
அதிர்ஷ்டசாலியாய்
தப்பித்தவறிய
ஒரு விதையாய்
மண்ணில் வீழ்ந்தேன்.

துளிர்விட
பூமித்தாயிடம்
உயிர் பிச்சைக் கேட்டேன்.
’என் கர்ப்பபை வறண்டுக்கிடக்கிறது
நீரில்லை நீரில்லை’ என்றது.

மேகத்தாயிடம் முறையிட்டேன்
’நானே ஈரமின்றி மலடாகிவிட்டேன்
மழையில்லை மழையில்லை’ என்றது.

சினத்துடன்
அக்னிக்கதிர்கள் பொழிந்த
கதிரவனை அணுகினேன்.
’நானே சூடேறி தகிக்கிறேன்
மரமில்லை மரமில்லை ’என்றது.

ஆக்ரோஷத்தில்
மண்ணை முட்டி வெளியேறி
சுற்றி முற்றி பார்த்தேன்.
என்னைச்சுற்றி
ஒரு சருகுகூட இல்லை
மரித்துப்போன
என் மூதையரான
மரக்கிழவர் கிழவிகளிடமிருந்து
உதிர்ந்த விறகுக் கூட இல்லை.
உற்றுக் கவனித்தேன்
பூமியெங்கும்
ஒரு பறவையும் இல்லை
ஒரு விலங்கும் இல்லை
ஒரு மனிதன்கூட இல்லை

வேறு வழியின்றி
நானும் மாண்டுப்போகும்
இந்த 2050ம் ஆண்டின்
இந்த நொடியில்
ஒரே ஒரு கவிதையை ஏந்திய
ஒரே ஒரு தாளொன்று
என்னிடம் வந்தது.

இக்கவிதை
2015 ம் ஆண்டு
ஒரு தீர்க்கதரிசி கவிஞனால்
எழுதியிருக்க கூடும்..

படித்தேன்..

”மதம் வளர்க்கும் மனிதா.-வீட்டிற்கு
ஒரு மரம் வளர்த்துவிடு மனிதா..!
மரமில்லை என்றால் மனிதா
மழையில்லை மனிதா...!
மழையில்லை என்றால் மனிதா
குடிக்கும் நீரில்லை மனிதா.!
நீரில்லை என்றால் மனிதா..
இனி நீயுமில்லை மனிதா..! ”

தன்னினத்தை தானே
இன தற்கொலைச்
செய்துக்கொண்டதோ
அன்று வாழ்ந்த
மனிதயினம்.. !??

**

இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-Oct-15, 4:37 pm)
பார்வை : 94

மேலே