பாவம் அவர்கள்-Mano Red

இரக்கப்படுகிறோம்
அவர்கள் இந்தியாவில்
பிறந்ததற்காக அல்ல,
வல்லரசாக்காமல் இறந்து
கடமையைச் சரியாக
செய்யாமல் போனதற்காக..

அவர் அப்படி
இவர் இப்படியென
எவரும் எவரைப் பற்றியும் பேசலாம்,
இருக்கும்போது
இறக்கச் சொல்லும் நாமே
இறந்த பின்பு அவர்களை
இருக்கச் சொல்கிறோம்.

பாச வேசங்களினால்
பட்டை தீட்டப்பட்ட
பகுத்தறிவுக்கு
நினைவுகூறல் என்பது,
தற்காலிக அழுகையில்
கண்ணீர் சுரந்து
பொழுது சாய்ந்ததும் பல் இளிக்கும்
நாடகம் போலத்தான்.

போற்றுவதற்கும்
போட்டு உடைப்பதற்கும்
சந்தர்ப்பம் கிடைக்காத
சந்தர்ப்பவாதிகள்
நேரம் நாள் பார்த்து
நாகரீகமாக காத்திருக்கிறார்கள்
சிரித்து அழுவதற்கு...

தயவுசெய்து
உங்களின் சோக மூட்டைகளில்
தீயை வைக்காதீர்கள்.
காற்று மாசுபடுமென்ற
கவலையில் அல்ல,
காற்றில் கலந்திருக்கும்
கலாம் போன்றவர்களுக்கு
மூச்சடைக்கும் என்பதை
மனதில் வைத்தாவது..

எழுதியவர் : மனோ ரெட் (15-Oct-15, 9:56 am)
பார்வை : 106

மேலே