வாழ்வின் சில தருணங்கள் - உதயா
என் புவியுலக பயணம்
முடியும் தருணத்தில்
மிஞ்சியிருந்த சில மாதங்களை
நான் எண்ணிக்கொண்டிருந்தேன்
எவர் எவரோவின்
தேவைகளையெல்லாம் தேடி கண்டுபிடித்தும்
நிம்மதி மட்டும் என் தேவைகளின் பட்டியலில்
நீண்டுகொண்டே இருந்தது
மிச்சமிருந்த நாட்களிலாவது
நிம்மதியை கண்டுபிடிக்க
துறவு வாழ்வில்
புகுந்துவிட்டேன்
மாளா ஆசைவொன்று
மீண்டும் என்னை
புதியதோர் பட்டியலில்
அணைத்துக்கொண்டது
துறவினை வெறுத்து இன்றே
என் பயணத்தை முடித்துக்கொள்ள
என் வாழ்வின் இறுதி
நொடிகளை நோக்கி பயணித்தேன்
எவனோ ஒருவன்
என் பாதையில் குறுக்கிட்டு
எதையோ சொல்லி சொல்லி
தன் வயிறினைத் தட்டிக் காட்டினான்
நானும் எதையோ எண்ணியவாறே
என் சட்டைப் பையில் மிச்சமிருந்த
சில ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுக்க
அவன் கரம் என் காலினைப் பற்றியது
எதையோ சொல்லியாவாறேப் பிறந்த
அவன் முகத்தின் மலர்ச்சியும்
அவன் கண்ணீரின் வீழ்ச்சியும்
என் தேடலை முடித்துவைத்தது
எல்லையற்ற தொலைவிற்கு
வாசலமைத்து என்னும் நிம்மதி குடியேற
வாழ்க்கையின் அர்த்தங்கள்
மெதுவாய் என்னுள் மலரத் தொடங்கியது

