காமம் அல்ல உன் காட்சிப்பிழை

மனித சத்தங்களின் ஊடே
ஏலமிட்டுக்கொண்டிருந்தான்
உன்னை ஒருவன்

ஓரமாய் அமர்த்தப்பட்டிருந்தாய்
ஏதும் அறிந்திறா நீ.

பார்த்தவுடன் பிடித்துவிட்டது
வரதட்சணை நான் கொடுத்து
தோளில் ஏந்தி
கொண்டுவந்துவிட்டேன்
என்னோடு உன்னை.

வெளியே திடமாய் நிற்கும் நான்
உள்ளே அழுவதை நீ மட்டும் அறிவாய்.
என் கண்ணீரையும் நீயே துடைப்பாய்.

பகலெல்லாம் நான் உன்னை மறந்தாலும்
இரவில் இதமாய் அணைத்துக்கொள்கிறாய்
நீயும் என் மேலே துயில் கொள்கிறாய்

அவ்வப்போதுகளை தவிர்த்து
எப்போதும்
உன் பொழுதுகள் கட்டிலோடே கழிகிறது.

சிலவேளைகளில் ஆடைகளோடும்
பல வேளைகளில் அரைநிர்வாணத்தோடும்
அப்படியே என்னை ஏற்றுக்கொள்கிறாய்.

மொட்டை மாடியில்
தலை கால் தெரியாது
கட்டிக்கொண்டு கிடக்கிறோம்
வெயில் உன்னுள் புகுந்து என்னைச் சுடும் வரை.

கோடைகாலங்களில் உன்மேல் நானும்
குளிர்காலங்களில் என்மேல் நீயும்
இரவைக் கடத்துகிறோம்.

இன்றே நான் இறந்தாலும்
கட்டிய மனைவி
கண்ணீரை மட்டும் சிந்திவிட்டு
கல்லாய் இருப்பாள்.
நான் தொட்ட பாவத்திற்கு
என்னோடு உடன் கட்டை ஏற்றப்படும்
"போர்வை"யே
நீயே என் முதல் மனைவி...

எழுதியவர் : மு. ஜெகன் (19-Oct-15, 4:32 am)
பார்வை : 1809

மேலே