தித்திக்கும் காதல் புத்தகம்
இல்லையென்று மறுதலிப்பவனுக்கும்
உண்டென்று ஆதரிப்பவனுக்கும்
இடையே இருந்தும் இல்லாமல் இருப்பவன்
அக்கறைக்கும் உதாசீனத்துக்கும்
அருகருகே நாற்காலி போட்டு
அமர்ந்துகொண்டு
அகிலத்தை ஆளும் பேரரசு
நம்புபவனையும்
நம்பாதவனையும்
ஒரே தராசில் நிறுத்து
மரணத்தின் கூடைக்குள்
கொட்டிவிடும் ஒரு மாய வியாபாரி.
இல்லையென்று கைவிட்டவனிடமிருந்து
உண்டென்பவன் கைப்பற்றிக் கொண்ட
பொக்கிஷம்.
தேடாமல் இல்லை என்றவன்
தெருவிலிருந்து
தேடிக் கண்டுபிடித்த கடவுள்
தெய்வீகத்தின்
தித்திக்கும் காதல் புத்தகம்
*மெய்யன் நடராஜ்