கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 60
ஒரு சங்க இலக்கியத்தின் தாக்கத்தை மற்றுமொரு பாடலில் தடம் பதித்த கவியரசரின் பாடல் இங்கே.
நாயகி மீண்டும் வருவேன் என்று சொல்லிச் சென்ற நாயகனின் எண்ணம் ..இவள் நினைவுகளை வாட்ட அதை தென்றலிடமோ...நிலவிடமோ. .அல்லது ஒரு மலரிடமோ தூது செல்லச் சொல்லும் அளவில் பகிர்வதுண்டு.
அப்படியான ஒரு பாடலாக இங்கு கண்ணதாசன் ஒரு மலரிடம் இந்த நாயகி தன்னிடம் அவனது நினைவுகளின் தாக்கத்தை அழகான மென்மையான பாவத்தில் உரைக்கிறார். அதற்கு சுசீலாம்மாவின் குரல் பாவம் ... சொல்லவும் வேண்டுமோ. ஏ.எம். ராஜா அவர்கள் இசையில் .. தேனிலவில் நல்ல ரசனை உள்ளம் கொண்ட மனங்களுக்கு இதமான பாடல் .. புது இலக்கியமாய் ...அவர்தம் வரிகளில். நடிப்பில் வைஜயந்தி மாலாவின் நிதான நடையில் ..ஏங்கும் முகபாவத்தில்.. அழகின் வடிவாய் வடியும் உணர்வுகளில் ..இதோ ..இங்கே.
' மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
காதலர் உன்னைக் காண வந்தால்
நிலையைச் சொல்வாயோ - என்
மனதைச் சொல்வாயோ..
அவளிடம் அங்கு பகிர்ந்து கொள்ள மலரன்றி வேறு எதுவும் இல்லை. வாடும் மனம் கொண்டவள் தலை குனிந்து தானே இருக்கும். மலரைக் காண அதையே தன் தூதுக்கு உட்படுத்துகிறாள்.
அவளும் மலரின் நிலையும் ஒன்று. மலர்வதும் வாடுவதுமாய் இரண்டு பேருக்கும் ஒரே இயல்பு அல்லவா..! அதனால் மலர் ஒன்றிற்கே இவள் மனதின் வாட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். என்றாவது தன் காதலன் இந்தப்பக்கம் வந்தால் அவளது மனம் காணும் துன்பத்தை அவனிடம் உணர்த்துமாறு. ஒரு விண்ணப்பம் வைக்கிறாள்..
எப்படியெல்லாம் அவள் மனம் வாடுகிறது..
'காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ..காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ ..பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது .. என் நிலையும் மாறாது..
நாடக மேடையில் காட்சிகள் அடிக்கடி மாறுதல் போல இவள் இன்று மனம் வாடுகின்ற நிலை மாறாதா... என்று ஏங்கி
எதற்கும் காலநேரம் வேண்டுமென்ற நம்பிக்கை கொண்டவள் .. அந்தத் தனக்கான காலம் விரைவில் தன்னை நாடி வாராதோ என்று மயக்கம் கொள்கிறாள்.
யார் எப்படி அடுத்து அதற்குள் மாறி வந்தாலும் இவளது காதல். கொண்ட இதயம் என்றும் தன்னிலை மாறாது என்கிறாள்.
அடுத்து எதனால் அவளுக்கு இந்த நிலை. ? அவளது மனம் எதை நோக்கிச் செல்கிறது என உரைக்கிறாள்..
'கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே.. கலந்தே நின்றாரே.
நினைவுகள் தோன்றும் நெஞ்சினில் என்றும்
நிறைந்தே நின்றாரே.. நிறைந்தே நின்றாரே ..
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும் திருநாள் வாராதோ ..எந்தன்
மணநாள் வாராதோ..
அவள் கண் கொண்டு பார்க்கும் காட்சிகளிலெல்லாம் அவன் உருவமும் சேர்ந்தே தோன்றுகிறது. நினைவுகள் எப்படித்தான் உதித்து வந்தாலும் அந்த உணர்விலும் அவனே கலந்து நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க ..இவளது சிந்தை வேறிடம் செல்வதற்கு வழி இல்லையே.
இனி அடுத்து வேறென்ன நடக்கவேண்டும். ஊரறிய அவனுடன் வாழ்வில் ஒன்று சேர்க்கும் மணநாள் அவளுக்கு வரவேண்டும்.. என்று அந்தத் திருநாள் வரும் ? ...என்று ஏங்கித் தவிக்கும் இவள் உள்ளம் கொண்ட சோகத்தில் நமக்கும் ஒரு பச்சாதாபம் ஏற்படவே செய்யும்.