கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 59
எத்தனை பாடல்கள் நம் தமிழில் ஆண்டாண்டு காலமாய் மரணத்தைப் பற்றிப் பாடி வந்திருந்தாலும் கண்ணதாசனின் இந்தப்பாடல் போன்று ஒரு மரணத்தை நோக்கிச் செல்லும் மனிதனின் மனநிலையைப் பிரதிபலித்தது போன்று எல்லோரையும் எளிதில் சென்று அடைந்ததில்லை. இதைக் கேட்பவனுக்குத் தப்பாமல் மரணத்தை துச்சமாக நினைக்கும் மனநிலையைத் தரக்கூடிய ,
அழுத்தமான சிந்தனை .. எளிமையான சொல்வளத்தில் அமைந்துள்ள அற்புதமான பாடல்.
ஆசைப்படாதே, கோபப்படாதே என்றெல்லாம் அறிவுரைச் சித்தாந்தம் பகரவில்லை. எடுத்த எடுப்பிலேயே ..மனசாட்சி குத்துவதால் துடிப்பாகி..இனி அதைச் சரிசெய்ய முடியாத இயலாமையில்.. கால் ஊனமும் அடைந்து மனம் விரக்தியாகி மரணத்தை நாடிச் செல்கிறது.
தனது பாவங்களை அனைவருக்கும் பொருத்தமான வரிகளில் வைத்து பாடிச் செல்கிறான்... பாவ மன்னிப்பைத் தேடி கதறி அல்ல.
மனிதப் பிறவியையே வெறுக்கிறான். முதல் தொகையறாவிலேயே ... மனிதன் செய்யும் தவறுகளைச் சொல்லி முடித்து விடுகிறான். அடுத்த கட்டமாய் அவனது வாழ்வில் கசப்பு உணர்வு எப்படி தோன்றும் என்பதை ..சித்தாந்தமாய் வடிக்கிறான்.
இதைக் கண்டு நாம் அவனது அதைரியத்தைப் பார்த்து பாவப்படுகிறோம். ஆனால் அவன் நினைத்துப் பாடிய வார்த்தைகளில் உண்மையின் ஆழத்தைக் கண்டு திகைக்கிறோம்.
புரிந்து கொள்ள கஷ்டப்படும் சித்தாந்தத்தை .. நம்மை ஒருவனுக்காகப் பரிதாபப் படவைத்து.. ஈர மனதில் விதைகளாகப் பாவி விடுகிறார் கண்ணதாசன்.
உயிரின் கதறலுக்கு துடிப்பான டி.எம்ஸ் குரல் பாவம் இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்கள் இசையில் ஆரவாரமான போக்கிலே.. பாதகாணிக்கை யில் ..எஸ்.ஏ. அசோகன் நடிப்பில்..
' ஆடிய ஆட்டம் என்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வம் என்ன
திரண்டதோர் சுற்றம் என்ன
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன...
சுகமான வாழ்க்கையில் நிலையாமையை மறந்து எப்படியெல்லாம் ஆட்டம் ஒருவருக்கொருவர் காண்பிக்கிறோம்.
பேசும் வார்த்தைகளில் உண்மை பொய் என்று எத்தனை ஜாலங்கள். தேடிய செல்வம் தரும் போதைகள் எத்தனை விதம். செல்வாக்கில் அகந்தையாயிருக்க நம்மைச் சுற்றி இருக்கும் கூட்டம் கண்டு மனம் களிக்கும் விதம்தான் எத்தனை..!
இவையெல்லாம் எதுவரை ? இந்த உடலெனும் கூட்டை விட்டு உயிர் எனும் ஆவி பறந்து விட்டால்... நாம் கண்டவற்றில் எவை தான் கூட வரும்..?
மனமே யோசி...
சரி பிறகு என்ன தான சொல்கிறார்..?
கேள்வி எழுகிறது..
' வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?
நிரந்தரமாய் எதுவுமில்லை என்று சொன்னால் ஓரளவிற்கு நிரந்தரமாய் நிற்கக் கூடியது இவைதான் என்கிறார்.
ஒருவன் மரணமடைந்து விட்டால் அவனது உறவுகள் வீடு தேடி ..
அந்த ஆன்மாவை அதைச் சுமந்திருந்த உடலை வழி அனுப்ப கூடி நிற்கும்.
தெருவில் அவனது உடல் பூரணமரியாதை யோடு சுமந்து செல்லப்படும் போது மனைவியென்பாள் புலம்பித் தவித்து நின்று விடை கொடுப்பாள்..
இடுகாட்டிற்குச் சென்று அதை எரியூட்டிக்
காற்றில் ஐக்கியமாக்கும் வகையில் கொள்ளி வைக்க அவன் பிள்ளை வருவான்.
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா..?
அதுசரி...உயிர் உடலில் ஆடும் வரை இவன் போட்ட ஆட்டங்களுக்கு குறைவில்லை..ஆயிரம் வகைகளில் அடங்காத மனதை ஓட்டிச் சென்று வாழ்வை ரசித்தவன். அவனுக்காக... உறவு பந்தங்கள்,மனைவி என்று கூடி வரும் கூட்டங்கள் உடலுக்கு கொள்ளி வைக்கும் வரை கூட வராதே... அருகித்தான் செல்லும். அதற்குள் இவனுக்கென்ன.. ஆசை , அகந்தை எல்லாம்.. என்று மறைமுகமான அழுத்தமான கேள்வியைப் பதிக்கிறார் கவிஞர்.
அடுத்து காற்றில் கலந்தவனோடு வேறு யார் வருவார்... முடியுமா ? ஒருவருமில்லை யே. தன்னை யறியாது தனியாகப் பிறந்தோம்.. .. தன்னை உணர்ந்து வாழ்ந்த பிறகும் தனியாகத் தான் செல்கிறோம்.
தானறிந்த வாழ்க்கை எப்படித்தான் இருந்தது ..? சொல்கிறார்... இதற்கு முன்னம் ஓலமிடும் அவன் செவியில் .. ஆங்கே வேலை பார்க்கும் வயலில் மரத்தில் தொட்டில் கட்டி கழந்தையைத் தாலாட்டும் குரல்..ஆர் ..ஆரிரோ .. ஆரிரோ......தேனாய் ப் பாய்கிறது.
கனியும் குரலில் இனிய உணர்வுகள் சற்றே எட்டிப் பார்க்கின்றன.
' தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி..
தொட்டில் குழந்தையாய் இருக்க அன்னையின் சுகமான அரவணைப்பு..
வாலிபக்தில் இதம்தரும் மனைவியின் அரவணைப்பு.. பசி ஒன்றே அறியக் கூடிய முதுமையில் தேவையான உணவு..
இவை கிடைத்தும் வாழ்வில் கெட்டபின்புதான் பற்றறுத்த நிலை வந்து அவனுக்குள் ஞானம் பிறக்கிறது.
அடுத்து .. இதுதான் என்று நிதர்சனப்படுத்த முடியாத உண்மைகளை.. இவ்வாறு உரைக்கிறார். மனிதனின் மதிமயக்கம் இங்கே..
' சென்றவனை க் கேட்டால் வந்து விடு என்பான்..
வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்..
இதைத்தத்துவ ரீதியாகவும் யோசிக்க லாம்.. அவனது முன்னவர்களைக் கேட்டால் காரியம் முடிந்ததும் தங்களோடு சேர வரச்சொல்வார்கள். இருக்கிறவன் ..பெற்றமகள்..பேரன் இவர்கள்.. தங்களுக்கு இடம் வேணும் நீ வேளை வர ஒதுங்கி விடு என்று சொல்லாமற் சொல்லுவர்.
இவ்வளவும் நினைத்த பிறகு இவனுள் இறுதியாக ஞானம் ஒன்று பிறக்கிறது.
' விட்டு விடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலை ப்பு..
ஆஹா... எப்படி ஒரு விரிவான விளக்கத்தைக் சுருக்கமாய் சொல்லி விட்டார்.
உயிர் உடலின் பிரிந்தாயிற்று... அதைச் சுமந்த உடலும் மரம் பட்டது போல் உணர்வற்று. வீழ்ந்தாயிற்று .....எரியூட்டப் பட்டும் விட்டது.
சரி அந்த உயிர் எங்கே...?
அது சூன்யமான ஒரு நிலை ..
அதில் எந்த சக்தியும் உணரப்படாது.. இருட்டான பிரதேசமான இன்னொரு கருவறைக்குள் உட்புக தயாராகி விட்டது . உயிருள்ள மனிதன் அதை உணரமாட்டான்.. உடலைவிட்ட உயிர்... அந்த ஆன்மா ஒன்றே அதை அறியும்.
கொதைதனபாலன் youtu.be/4cEOPNXnESw