குழந்தை மனசு
இரண்டு விளையாட்டுச்சாமன்களை
கையில் எடுத்துக்கொண்டாள்
தம்ளரை போல
என் செல்லமகள்..
ஏதுமில்லாத தம்ளரை
மேலும் கீழுமாக ஆத்தினாள்
வெகு வேகமாக..
என்ன பாப்பா
என்ன செய்யறே என்றேன்
அப்பாக்கு காப்பி ஆத்தறேன் என்றாள்...
ஆத்தும் வேலை
இப்போ முடியும்
அப்போ முடியும்
என பார்த்துக்கொண்டிருந்தேன்...
ஆத்த ஆத்த வேகம் அதிகமாகியது...
திடீரென்று ஒரு விளையாட்டு சாமான்
கீழே விழுந்தது...
அச்சச்சோ என்னாச்சு பாப்பா என்றேன்...
காப்பி ஊத்திருச்சுப்பா என்றாள் சோகமாக...
அவள் சொன்னதை கேட்டு
சிரிக்க ஆரம்பித்தேன்...
நான் சிரிப்பதை
கோபமாக பார்த்தவள்
வேகமாக சென்று
துடைக்கும் துணியொன்றை
எடுத்துவந்து
காப்பியே இல்லாத
தரையைத் துடைக்க ஆரம்பித்தாள்...
அவள் செயலைப் பார்த்து
சிரித்த என் வாய் தானாய் நின்றது...
அப்போது
அவளது குழந்தைமனசு
என்னைப்பார்த்து சிரிப்பதாக தோன்றியது...!