உயிர்க்கொல்லி
வெகு தூரத்தில் மலை ஓரத்தில்
விபரம் புரியாமல் ஒதுங்கி நிற்கும் வெண்ணிலவே!
விடியாத எங்கள் வாழ்க்கையில்
கொஞ்சம் இருளை போக்கவாவது நீ வாராயோ!
எங்களைவிட அதிக பதட்டமாய்
எரியும் சின்ன விளக்கே! விளக்கின் ஒளியே!
இரத்தம் போன்ற எண்ணெய் தீர தீர
இன்றே நிகழ்ந்துவிடுமோ உன்னழிவு!
எங்கள் அழிவு இன்னும் எத்தனை நாளிலோ!
எனக்கு உறுதுணையாய் இருக்கும் இருட்டைப்போல
என்னை அப்பப்போ அணைத்துக்கொள்ளும்
அம்மாவின் கிழிந்த சேலையே!
நாளையை நினைத்தாலே நடுக்கம் வருகிறது!
உன்னைப்போல என்னையும் கொஞ்சம் கொஞ்சமாய் கிழித்துவிடேன்!
அப்பாவும் அம்மாவும் வேறுவேறு சாதியாம்!
போனவாரம்வரை ஒதுங்கித்தான் இருந்தோம்!
எப்படியோ கண்டுபிடித்து வந்த சொந்தங்கள்
அப்பாவின் உயிரை எடுத்துச் சென்றுவிட்டார்கள்!
அம்மாவையும் என்னையும் துடிக்க வைத்துவிட்டு...!
ஆமா... சாதீன்னா என்ன? உயிர்க்கொல்லியா?
ஒதுக்கிவிட்ட சொந்தங்களே!
ஒதுங்கிவிட்ட ஊருசனமே!
அம்மாவோட கண்ணீர் துடைக்க யாருக்கும் வக்கில்ல!
மயங்கிக்கிடக்குற அம்மாவைப்பார்த்து
இந்த ஆறுமாசப்பையன் புலம்பறதும்
யாருக்கும் கேட்கப்போறதுல்ல!
நான் செஞ்ச தப்புத்தான் என்ன?
ஒரு வாரமாய் வீட்டில் எரியாமல் உயிரோடிருக்கும் விறகுகளே!
அம்மாக்கிட்ட பாலும் இல்லை!
என்னைப்பார்த்துக்க ஆளும் இல்லை!
அடுத்தமுறை எரியும் போது
என்னையும் அம்மாவையும் உங்கூட சேர்த்துக்குவியா?
அப்பா வளர்த்த அனாதை குட்டி நாயே!
நீ வேற வீட்டப்பார்த்துக்கோ!
கசக்கி கசக்கி இத்துப்போன
என்னோட சின்ன சட்டையே!
உன்னைப்போலவே நானும் இத்துப்போக ஆசைப்படுறேன்!
நாங்களும் மனுசங்க தானே!
சாதிப்பார்த்து சாதிப்பார்த்து உயிரவாங்கும் மனுசங்களே!
எங்களையாவது நிம்மதியா வாழவிட்டிருக்கலாமே!