மறவேன் உன்னை
என் ஆண்மையின்
பரிபூரணமே
பூர்வ ஜென்மம்
புலர் ஜென்மம்
இரண்டையும் உன்
கண்களில் கரைத்து
குடித்து விடுகிறாய்
யாருமற்ற அந்த
மலைப்பாதையில்
தனித்து நடக்கையில்
உன் நினைவுகளே
வழியாகின்றன
அதே நினைவுகள் தான்
வலியாகின்றன
பங்குனி திருவிழாவில்
நீ தொலைத்த (இல்லை)
எனக்காக தொலைய விட்ட
உன் இடது காலின் கொலுசு
இன்னும் இருக்கிறது
தகரபெட்டியில்
அப்பாவிற்கு பயந்து
என் வீட்டு வேப்பமரத்தில்
அணில் கூட்டிற்கு அருகில்
எழுதிய உன் பெயர்
அப்படியே இருக்கிறது
அழியாமல்
இந்த ராத்திரியின்
உஷ்ணத்தை இன்னும்
உயர்த்துகிறது
உன் நினைவுகள்
வார்த்தைகளை விட
மவுனத்திற்கே
அர்த்தங்கள் அதிகம் என்பதை
அறிய வைத்தவள் நீ
சில நேரம்
கோபங்களை
முத்தங்களாகவும்
முத்தங்களை
கோபங்களாகவும்
பரிசலிக்கும் பக்குவம்
உனக்கே உரித்தானது
எட்டி தள்ளி விடும் பொழுதும்
கட்டி தழுவும் பொழுதும்
உடனிருக்கும் உயிரற்ற
பொருட்களும் உயிர்
பெறுகின்றன அந்த
ஒரு நொடியில்
நான் என்றாவது உன்னை
மறந்திருப்பேன் என்றால்
அன்று நான் இறந்திருப்பேன்