மழையின் ஸ்பரிசம்

மெல்லிய மழைக்காற்று
என் இதயம் தொடுவதை உணர்கிறேன்.
கடந்த இரவுகளின் சிந்தனையில்
மதிய நேர சிற்றுறக்கத்தில்.......!

சிலிர்ப்பில் கலைகிறது உறக்கம்
.
”இப்போது நான்கு மணி மாலைப்பொழுது..
ஜன்னல் வழி தெரியும்
சிறுதூறல் ஞாயிறு மாலையை ரசித்திடுங்கள்...
பயிர்ப்பணிக்கு கொஞ்சம் விடுப்புக்கொடுத்திடுங்கள்”..

சுவற்றின் கடிகாரம்
சூசகமாய்ச் சொன்னது...

ஜன்னலைத்திறந்தேன்
நீல நெடு வானம்
மேகக்கூட்டங்களில்
நிறைந்து நின்றிருந்தது...
மழைத்துளிகளின் மூலக்கூறுகளோடு...

பச்சை வயல் மேலோடும்
மின்சாரக்கம்பியிலமர்ந்து
குளிர்ந்துவரும்
முன்-மழைக்காலத்தை ரசித்தபடி
”மழையின் சாரல் சுகத்தில்
இன்றைய இரவு இதமான இரவுதான்.” என..
பெண் பறவையின் காதில்
ஆண்பறவையின் அன்னியோன்ய பேச்சு.
சின்னக் கிசுகிசுப்போடு !.

அது பறவைகளுக்கு மட்டுமல்ல
நம் இருவருக்கும் கூடத்தான்...!
அருகில் வந்த மனைவியை பார்த்தேன்.

எங்கள் கிராமிய வெட்கத்தை வெகுவாய்
ரசிக்குமுன்னே மாடுகளின் மழைக்குரலில்
மாட்டுச்சாலைக்குள் மறைந்தே போனாள்.

அவள் வைத்துவிட்டுபோன
குணச்சுவை மாறா காபி மணம்...
என்னைக் கலைய வைத்தாலும்.
பார்வை தொலை நோக்கியை
குளிர்காற்று வாடையடிக்கும்
வடக்கு திசை நோக்கி குவியமிட்டேன்....

கருந்திரள் மேகங்கள்
அவற்றின் உணர்வலைகளை
மழையாய்க் கொட்டக் காத்திருந்தன....

தென்புறம் திருப்பினேன்
வாழைத்தோப்போரம் பார்வைக்கோணத்தை.

மயில்கள் இரண்டின் ஒத்திகை...
அவற்றின் இரு குஞ்சுகள் மட்டுமே பார்வையாளர்களாய்..!

நடனம் பயிலும் குழந்தைகளாய்
பெற்றோரின் நடன அசைவுகளை
முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தன..

இப்போது நிறைந்த சில்லென்ற காற்று
மண்வாசனை நெடியோடு
மழை வாசனையை சொல்லிப் போனது...
என் மூக்குக்கு ...

வடக்கு திசைப்பறவைகள்
இப்போது தென் திசை நோக்கி
ஆயத்தமில்லா அவசரத்தோடு
அரக்கப் பரக்கப் பயணப்பட்டன..

அவசரமிருந்தாலும்
அவை பறக்கும் உன்னதத்தில்
அற்புதமிருந்தது...
கைதேர்ந்த விமான அணிவகுப்பை
மிஞ்சும் கட்டமைப்போடு...!

அவற்றின் அணிவகுப்பில்
சொக்கிப்போய் நின்றேன்.
சிலிர்த்து சிறுதூரலோடு வந்தே விட்டது மழை....
கியர்களை மாறி வேகமெடுக்கும்
கைதேர்ந்த காரோட்டக்காரரின்
கைவண்ணத்தோடு....!

முதல் கியரில் தொடர்ந்த மழை
உச்சகட்ட வேகத்தில்
ஓட்டுக்கூரை உடைபடாத லாவகத்தோடு
ஆலங்கட்டிகள் பளிங்குக் கற்களாய்
எங்கள் ஓட்டுக்கூரையில்
ஜதியோடு விழுந்தன...
பழங்காலப் போர்ப் பரணிக்கு
இசையமைக்கும் தொனியைப் போலே....!

பூமித்தாய்க்கும்
ஏழைகள் எங்கள் நிலங்களுக்கும்
பசுமையையும் குளிர்ச்சியையும் தந்து அழகாக்கிட்
ஆரம்பம் தந்தது பருவமழை

வேகமெடுக்த மழையின் சாரல்கள்
அடிக்கின்ற மழையின் வலிமை..
இவையிரண்டும்
காட்சிகளை ரசித்துப் பார்த்திருந்த
ஜன்னலை மூடித்தான் ஆகவேண்டுமென்று
கட்டாயப்படுத்தின..

அதற்குப் பிறகு
எதையும் பார்க்கமுடியவில்லை..!

கேட்க மட்டுமே முடிந்த்து...
கூரையின் தோணியில்
சுரம் மாறாத மழைத்தண்ணீர்
தாளலயங்களின்
இயற்கையான சிம்பொனியை இசையை..!
..

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (22-Oct-15, 9:17 am)
பார்வை : 408

மேலே