கவிஞன் அவன்

மெய்யெழுத்தில் உயிர்கொடுத்து மெய்யெழுதி சலித்தவன்;
உவமையெனும் உத்தம பொய்யெழுதி களித்தவன்!


ஐங்குணமும் ஆறறிவும் வரமாய் பெற்றவன்;
ஆயக்கலை தன்னில் அறுபதாவது கலைஞன்!


ஞானத்தை கொடுத்து நல்லதை விதைத்தவன்;
கானத்தை பொருத்து நாதத்தை வளைத்தவன்!


குருவிக்கூட்டில் போற்முழக்கத்தை கொக்கரிப்பவனா கவிஞன்?
காகமுட்டைக்குள் ஒளிந்திருக்கும் . குயிலிசைக்கும் மொழிப்புனைந்தவன்!


சமூகத்தை சாடி சாட்டை எடுப்பான்:
மயிலிறகு குட்டியிடுமென புத்தககூட்டில் மறைப்பான்!


இவ்வுலகிற்கு அதன்நியதிப்படி இவன் பைத்தியம்தான்:
ஆயினும் அவன்பார்வையில் நாமெல்லாம் பைத்தியம்தான்!




அடுத்த நூற்றாண்டின் கனவுகள் அவனுக்கு உண்டு:
இன்றைய சமூகத்தின்மீது அக்கறையும் கவலையுமுண்டு!


வேளைகள் அவனுக்கில்லை ஆனால் பசித்தது;
உணவுஇல்லை என்றாலும் மொழி இனிதிருந்தது!


அடுத்த நூற்றாண்டின் மாகவிஞன் அவன்;
இந்த நூற்றாண்டே நீநகர்ந்து வழிவிடு!

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (23-Oct-15, 8:29 pm)
பார்வை : 200

மேலே