புத்தாடையும் பட்சணமும்

பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு அல்லது பத்து நாளைக்கு முன்பே துணி கடைக்குச் சென்று, துணி எடுத்து வந்து, ஊருக்குள்ள ஒன்று அல்லது இரண்டு டெய்லர்கள்தான் இருப்பார்கள்... அவர்களிடம் சென்று, அளவு கொடுத்து, தைத்து வருவதற்குள் அத்தனை ஆனந்தம்...

நாளை பண்டிகை என்றால், இன்று கடைக்கு சென்று துணி எடுத்த ஞாபகமும்
உண்டு....
சுவர் தரையெல்லாம் சாணம் இட்டு, மொழுகி, அரிசி மாவு கோலம் போட‌ பக்கத்து வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களும் ஒத்தாசைக்கு வருவார்கள்... அதை பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்...

அப்பாவிடம் பணம் இருக்கா இல்லையா என்றெல்லாம் தெரியாது... ஆனால்
வரும் போது பை நிறைய பட்டாசு வரும்....

முறுக்கு மாவு அரைக்க மில்லுக்குச் சென்று, வரிசையில் நின்று, அரைத்து
வந்து, அம்மாவிடம் கொடுத்து.... முறுக்கு சுடுவதற்கு வடை சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, அம்மா எண்ணெய் வாங்குவதற்கு கடைக்கு அனுப்பிய ஞாபகம்...

அவர்கள் முறுக்கு சுடச் சுட, அதை உடையாமல் டின்னில் அடுக்கிய ஞாபகம்...

தாத்தாவுக்கு பல் இல்லாத‌தால் முறுக்கை அம்மியில் வைத்து அரைத்து
கொடுத்த ஞாபகம்...

அப்போதெல்லாம் யார் வீட்டிலாவது ஒருவர் வீட்டில்தான் மருதாணி செடி
இருக்கும். அதை பறித்து வந்து அம்மா அரைத்து இரண்டு கையிலும்
வைத்து விடுவார்கள். அன்று சாப்பாடு அம்மாவே ஊட்டி விடுவார்கள்.
மறக்கவே முடியாத இனிய ஞாபகம்....

ஆனால் இப்போது எல்லா கடைகளிலும் மருதாணி கோண் கிடைக்கிறது.
அதை பார்க்கும்போது ஏனோ மனம் விரும்ப மறுக்கிறது...

பண்டிகை அன்றுதான் வீட்டில் இட்லி, தோசை, வடை, கேசரி எல்லாம்
செய்வது வழக்கம்..

தெருவில் எத்தனை வீடுகள் இருக்கிறதோ.. அத்தனை வீடுகளிலும்
பலகாரங்கள் பரிமாறிக்கொள்வோம்...

அத்தனையும் இப்போது மாறி வருவது வருத்தமாக இருக்கிறது...

இப்போது தெருவுக்குத் தெரு புதுப்புது ரெடிமேட் கடைகள்... எப்போது
வேண்டுமானாலும் செல்கிறோம்... எடுக்கிறோம்...

ஒரு முறை போடும்போதே அது 'டர்' என்று கிழிந்து விடுகிறது...

ஸ்வீட் ஸ்டால்களும் இஷ்டத்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக‌
வாயில் வராத புதுப்புது பெயர்கள் வேறு.. வாங்கி வந்து குளிர்சாதன‌ப்பெட்டியில் அடைத்து வைத்து பண்டிகை கொண்டாட்டங்கள்...

அப்போதெல்லாம் நிறைய கஷ்டமும், வறுமையும் இருந்தது..ஆனால்
எதையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை சென்றது..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (25-Oct-15, 9:13 pm)
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே