சமமான சயனம்
பிறந்தோம். வளர்ந்தோம். பிறகோர்நாள் ஜீவன்
துறப்போம். அதற்குள் பகைமை - மறப்போம்.
சிறப்போம். பகுத்தறிவு கொண்டு சிரிப்போம்
திறப்போம் அறிவின் அரங்கு
வாழுகின்ற காலம் வசந்தமே என்றிங்கு
சூழுகின்ற இன்பம் சுகிக்கும்நாம் – வீழுகின்ற
நாளில் வெறுங்கையாய் போவோம் சுமகின்றோர்
தோளில் பிணமாய் சரிந்து
இருக்கின்ற வாழ்க்கை எமைவிட்டு இல்லா
திருப்பதற்கு ளன்பாய் இணையும் - விருப்பம்
திருப்பு முனையாகச் செய்வோம். பகையை
நெருப்பில் பரப்பி எரித்து.
வங்கிக் கணக்குப் வகைக்கொன்றாய் வைத்திருந்து
முங்கி நடந்தாலும் மேலுமோர்நாள் – தங்கி
பயணிக்க இல்லா நிலையை கொடுக்கும்
சயனம் எவர்க்கும் சமம்.
*மெய்யன் நடராஜ் .