கவிஞன் பாரதி

கவிஞன் பாரதி

மூளைக் குதிரையின் தோளைப் பற்றியோர்
மூர்க்கம் கடக்கிறது
வாளைச் சுழற்றுவ போல நிமிர்ந்தொரு
வார்த்தை நடக்கிறது.
வேளை தோறுமோர் , வேலை மாறிடும்
வேகம் துடிக்கிறது
காலைக் கதிரெனச் சூலைப் பிளந்தொரு
கவிதை பிறக்கிறது.

கொண்டு கொடுத்ததை மொண்டு குடித்ததைக்
கொட்டிவிடாமல் சேகரித்தான் !
விண்டு முடித்ததை பண்டு படித்ததை
விட்டுவிடாமல் தொட்டிழுத்தான் !
முண்டி முளைத்திடும் சிண்டு சிடுக்கினை
முறித்துத்தூக்கி எறித்துவிட்டான்
கண்டுபிடித்ததைக் கர்ப்பம் தாங்கியே
கவிதைஎன இங்கு தவழவிட்டான்.

வார்த்தைகளின் மேலேறி வானம் தாவி
வசந்தருது கொண்டுவரும் பாரதியார்
பூந்துளியின் வாசனையில் பறந்து சென்று
புலர்காலைச் சூரியனை முத்த மிட்டு
சூத்திரத்தில் சுருங்காமல் , விரிவு கொண்டு
சூட்சுமத்தைப் பிளந்தபடி அணுக்கள் கண்டு
தீத்துளியின் சுடர்க் கொழுந்து கிளர்வதேபோல்
திகுதிகுப்பாய் பெருநெருப்பாய் பற்றி வந்தான்.

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 3:01 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 97

மேலே