அப்போதைய தலைவர்கள்

அப்போதைய தலைவர்கள்
---------------
மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபட்ட ஏராளமான தலைவர்களைக் கொண்டது தமிழகம். அவர்கள் கட்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமாகாமல், அவர்கள் மூலமாகவே கட்சி அறிமுகமான காலமாகவும் அது இருந்தது.

மக்களின் நலனைக் காப்பது என்ற ஒரே உயர்வான கொள்கையைக் கொண்ட அரசியல் தலைவர்கள் மீது மக்களும் அளவற்ற அன்பை பொழிந்தனர்.

இதற்கு ஒரு உதாரணம்..

பேரறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்ப இருந்த சமயம் தனது வளர்ப்பு மகன் பரிமளத்தை அழைத்து “எனக்கு ஒரு கறுப்பு கண்ணாடி வாங்கி வா’ எனக் கூறினார்.

விமானத்தில் புறப்படுகிற நேரம் பரிமளத்திடமிருந்து அண்ணா அந்தக் கண்ணாடியை ஞாபகமாக வாங்கி தன்னிடம் வைத்துக் கொண்டார்.

சென்னையில் விமானம் இறங்கும்போது அந்தக் கண்ணாடியை அண்ணா மாட்டிக் கொண்டார்.

வெளியே அண்ணாவை வரவேற்க ஆயிரக் கணக்கிலே திரண்டிருந்த மக்களை அண்ணா அந்தக் கறுப்புக் கண்ணாடியை அணிந்தவாறே பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டே வந்து தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.

காரில் ஏறியதும் அண்ணா அந்தக் கண்ணாடியைக் கழற்றி வைத்துக் கொண்டார். இதுவெல்லாம் பரிமளத்திற்கு ஏனென்று புரியாமல் அண்ணா முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். பரிமளத்தின் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு அண்ணா பேச ஆரம்பித்தார்.

“”நான் சிகிச்சைப் பெற்றுத் திரும்புகிறேன். என் தோற்றம் சற்று மெலிவாக மக்களுக்குத் தெரியும். என்னை இத்தனை நாட்களுக்குப் பிறகு சற்று மெலிவாக பார்க்கிற மக்களுக்கு மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியே அதிகமாக ஏற்படும். அதைப் பார்க்கும்போது எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வடிந்து விடலாம். அப்படி நான் கண்ணீர் வடிப்பதை மக்கள் காண நேரிட்டால் அவர்களுக்குத் தாங்க முடியாத அழுகை வந்துவிடும். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் மக்களை கடக்கும் வரை என் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்து கொண்டேன்” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த பரிமளத்தின் கண்களில் கண்ணீர் கொட்டியது. இப்படி தன்னால் மக்கள் துயருற்று விடக் கூடாது என்று வாழ்ந்த உன்னதத் தலைவர்களைக் கொண்டது தமிழகம்.

இன்றைய இளைஞர்களும், அரசியலைப் பற்றி தற்போதிருக்கும் கருத்தினை மாற்றிக் கொண்டு, நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தலைவர்களை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களை பின்தொடர்வது எழுச்சி மிக்க தமிழகம் உருவாக வழிகோலும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : முகநூல் (27-Oct-15, 11:52 am)
பார்வை : 123

மேலே