கூற்றே உனை வெல்வோம்

விண்முட்டும் முகில்கூட்டம் கண்திறக்க ,
வீழுகின்ற நீராக கண்ணீர் ஓட ,
மண்விட்டுப் போனவுயிர் மீண்டி டாதா ?
மனம்பார்த்து கதறுகின்ற நிலையில் வாட ,
பண்சொட்டும் யாழுடைய நரம் பறுத்து ,
பதறுகின்ற பார்வையிலே நெஞ்சறுத்து ,
இன்பிட்டுக் காத்தவனை துன்பில் விட்டே ,
இதயத்தைக் கல்லாக்கி எடுத்துக் கொண்டாய் !

ஓ வென்றே அழுதாலும் செவியில் ஏறா
உழன்றடித்துப் புரண்டாலும் கண்ணும் பாரா ,
கோ வென்று குரலிட்டு கூவினாலும்
கூற்றே நீ கொண்டவுயிர் திரும்பி வாரா ,
தா வென்று தடியேந்தி உன்னை வென்று ,
தமிழகத்தின் ஒளித்திரை மீட்டு , நாங்கள்
கா வென்று தழைத்திடவே துணிந்து வாழ்ந்து ,
கற்பகமாய் நின்றிடுவோம் பாதை கொண்டு !
நெஞ்சறுத்து நிற்கின்ற கூற்றே ! எங்கள்
நினைவறுத்து களிக்கின்றாய் ! ஆனால் உன்னை
துஞ்சிருக்க விடமாட்டோம் ! தூய மேலோர்
துணைப் பறித்து துயரினிலே தவிக்கச் செய்த
நெஞ்சிருக்கும் மிருகமுனை நாங்கள் விட்டு
நானிலத்தில் வாழ்வதனால் பயன்தான் உண்டோ ?
மிஞ்சிருக்கும் நல்லோரைப் பரிக்கும் முன்னர்
மிசையேறி உன்னுயிரை பறித்து வேல்வோம் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (27-Oct-15, 3:31 pm)
பார்வை : 70

மேலே