இமயம்

விருதுநகர் தந்த வடபுலத்தின் இமயமலை
சரிசமமாய் மண்ணில் சாய்ந்தின்று நொறுங்கியதோ !
நறுமனத்துப் பூவும் நமைவிட்டு காற்றினிலே
கரைந்திடவே உள்ளம் ஓடியெங் கிறங்கியதோ !

கத்துகின்ற கடலும் கண்பார்வைக் கொட்டாமல்
சத்தமின்றி எங்கு சலித்து வரன்டாகியதோ !
எத்திசையும் கதிரை ஏற்றிவந்த செம்பரிதி
தத்தளிக்க விட்டுவிட்டு தானெங்கே ஏகியதோ !



கட்டிவைத்த கோட்டை கற்பனையாய் ஆகிவிட
கொட்டிவைத்த கல்லாய் குலைந்துருவம் சரிந்ததுவோ !
வட்டநிலா கொண்ட வடிவுமுகம் பட்டழிந்து
சுட்டுவிடத் தீயால் சுடர்மங்கி எரிந்ததுவோ !

ஆழ்கடலின் முத்து ஆறாத துயர்கொள்ள
பாழளையால் ஆழம் பாய்ந்தோடி அடங்கியதோ !
வேழத்துத் தந்தம் விளையாட்டுக் காட்டிவிட்டு
சூழ்துயரில் வீழ சுகமின்றி ஓடிங்கியதோ !

மாசற்ற தங்கம் மாந்தருடை மாசென்னி
கூசிடவே மண்ணில் குழிதன்னில் புதைந்ததுவோ !
தேசுடைய மீனும் தேயத்தால் மனங்கண்டு
வீசாமல் ஒளியை விரைந்தோடி சிதைத்ததுவோ !

காட்டாற்று வெள்ளம் கண்களில் புரண்டோட
வானத்தே தென்றல் வந்தெங்கே மறைந்ததுவோ !
தேனாடும் சுவையும் தான்கொண்ட சுவையிங்கே
வீனென்றே எண்ணி வந்தெங்கே உறைந்ததுவோ !

சந்தனத்தின் மேனி சமுதாய மனத்திற்காய்
வெந்தீயில் வந்து வீழ்ந்தின்று மனந்ததுவோ !
சொந்தமென நாட்டை சிந்தையினில் கொண்டதனால்
பந்தமென நாட்டோர் பதறிடவே கனன்றதுவோ !

மாற்றானின் தோட்ட மணமுண்டென்
டேற்றிட்ட மல்லி இதழ்வாடி உதிர்ந்ததுவோ !
கூற்றுவனின் வன்மைக் கொலைவாழும் நெஞ்சத்தின்
உற்றன அருளில் உடல்நனைக்கப் பதித்ததுவோ !

சினம்பெற்றே உண்ணும் சீர்கணியை சாவென்றும்
கனிவில்லா குரங்கு கரந்தன்னால் பிடிங்கியதோ !
குனிவில்லா காந்தி கொள்கையினை மேலோர்க்கும்
உணர்த்திடவே விண்ணில் ஓடிவுயிர் அடங்கியதோ !

எல்லோர்க்கும் கண்ணை உவந்தளித்த
கள்ளூறும் தமிழும் கண்துஞ்ச மூடியதோ !
மன்தாகம் தீர்த்த மலைதந்த காவிரியும்
தன்தாகம் தீர்க்க தான்கடலில் கூடியதோ !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (27-Oct-15, 9:26 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 236

மேலே