புதைந்து கிடக்கும் பெண் வீரத்தில் ஓர் அணுவின் புரட்டல் - உதயா

அடிமை காலங்கள் அழிந்துவிட்டது
அதி நவீன சட்டங்கள் பிறந்துவிட்டது
அடுப்பறை வாழ்க்கையும் முற்றுபெற்றது
ஆனால் இன்னும் அஞ்சுவதுதான் ஏனோ ?
ஆணுக்கு நீங்கள் சலித்தவரில்லை
அகிலத்தில் உம்பாதம் படரா சரித்திரமில்லை
அண்டத்தையும் தாண்டாமல் விட்டதில்லை
ஆனால் இன்னும் உறங்கிக் கிடப்பதுதான் ஏனோ ?
தன் மானத்திற்கு பங்கங்கள் நேர்ந்துவிட்டால்
தன் பயணத்தில் குள்ள நரிகள் தலையிட்டால்
தன் மனதிற்குள் நெறிஞ்சி முட்களை விட்டெறிந்தால்
தடுக்கவும் தகர்க்கவும் ஓர் ஆண்மகனை தேடுவது ஏனோ ?
நஞ்சு துளிரென அறிந்த பின்பும்
நாவினால் தன்னை சுட்டெரித்த பின்பும்
நாளுக்கு நாள் இடர்பாடுகளை கொடுத்தப் பின்பும்
நொடிப்பொழுதில் நசுக்காமல் காத்திருப்பது ஏனோ ?
பெண் குலத்திற்கு இழிவொன்று நேர்ந்தால்
பெண்ணியத்தில் வஞ்சக் காற்று வீசினால்
களையெடுத்து கண்ணியம் காக்காமல்
காலம் கனியும் வரை காத்திருப்பது ஏனோ ?
பறவைகள் சிறகிருந்தும்
நடப்பது ஏனோ ?
மீன்களுக்கு நீந்த தெரிந்தும்
நீரிலே மூழ்கி இறந்து போவது ஏனோ ?
சிறுத்தைகளும் சிங்கங்களும்
வேட்டையாடுதலை மறந்து கிடப்பது ஏனோ ?
அக்னி சுனைகளை பூங்காற்றில்
மறைத்து வைத்திருப்பது ஏனோ ?
படிந்த கரையினை தும்சம்படுத்த
முயலாமலே முடங்கி கிடப்பது ஏனோ ?
அவமானமென யாதுமில்லை அவைகள் பெண்ணின்
வீரம் புதைக்கும் போலி அலங்காரமென அறியாதது ஏனோ ?