இளமைக் காதல்

பனி விழும் மாதம்
பணி நிகழ்த்த வேண்டி
உந்து வண்டி யேகி
உற்சாக மின்றிச் சென்றிருந்த காலை

பள்ளி முடித்த
பருவக் கோதை குழாம்
வெள்ளிக் கூட்டமென
விரைவாய் வண்டி புகும்- அதில்
தள்ளித் தனியிருக்கும்
கள்ளிப் பால் நிலவாய்
துள்ளி வருவாள்
தூய பெண்ணொருத்தி

வானத்து நிலவவள்- என்ற
மோனத்தில் நானவளை
அண்ணாந்து பார்த்து
அயர்ந்திருந்த வேளை…

உந்து வண்டி உந்துதலில்
வந்து விழுந்தாள் மடிமேலே
பந்தான பூக்களென தனத்
தந்தான தாளமென

தஞ்சமென வந்த தளிர்மேனி
மஞ்சமாய் என் மடியமர்ந்த நேரம்
கொஞ்சம் தானெனினும்
கொள்ளை நேரம் அது
நெஞ்சிலமர்ந்து விட்டாள் நேரிழையாள்.

அந்த நாள்முதலாய் அன்பின் மயிலாள்
சொந்தமானதொரு சுந்தரச் சோபையுடன்
எந்தன் முகம் தேடி எதிர்கொண்டு
வந்தனங்கள் பாடும் வதனம் காட்டுகிறாள்..

அன்று முதலாய்….

பரிமாறும் பார்வை ஒருநாள் இல்லையெனில்
தடுமாறும் உள்ளம் தளர்ந்தாடும் உடலம்
மார்கழிக் காலையாய் மதிமுகக் குளிரைத் தேக்கி
தேர்போல் வரும் சித்திரம் கண்டால்தான்
உள்ளே கனறுகின்ற உளத்தீ அடங்கும்

அகரமே இல்லாத ஆத்ம மொழிகளை
பகருமே தினம் பாலிணை விழிகள்!!
கண்களை மீன்களென்பார்: ஆயின்
மீன்களே தூண்டிலாகும் மேன்மை அவளிடந்தான்..

மாதைச் செய்தான் மனத்தைச் செய்தான்
பாதையெங்கும் பாயும்விழி மேவச்செய்தான்
உள்ளத்துள் குடிவைத்து உறவினில் ஆடவைத்தான்-
ஏட்டினிலே காதலெனில் எழில்மனம் கிறங்குவோர்கள்
வீட்டினிலே காதலினில் வெம்பி வெதும்புவதேன்?
புலம்பினான் பாரதி, பொழுதின்னும் விடியலையே?

எழுதியவர் : வ.முத்துமணி (30-Oct-15, 4:19 pm)
சேர்த்தது : முத்துமணி
பார்வை : 208

மேலே