அதிகாலையில் அருமை பானம்
தூக்கம் கலையாக் கண்களுடன்
காலையில் எழுந்தவுடன் அம்மா
கொண்டுதரும் காபி என்னும் அருந்திரவம்
அது உள்ளேச் சென்றால்அன்றாடம்
வரும் எனக்கு புத்துணர்ச்சி .
போர்வை, பாயை மடித்துவிட்டு
அதை ஒழுங்காய் ஓரத்தில் வைத்து வர
அனுதினமும் அம்மாச் சொன்னாலும்
அந்த அமிர்த பானம் உள்ளே செல்லும் வரை
வராது வலிமை என் கைகளுக்கு.
விடுமுறை தினத்தில் வரும் 'சித்ரஹாரை'
பாயை கூட சுருட்டாமல் அம்மா சொல்வதும் கேட்காமல்
இறுதியில் வரும் ஒரு தமிழ் சினிமா பாட்டுக்காக,
அரைமணி நேரம் அந்த காபியுடன், டீவீ முன் அமர்ந்து
ரசித்து, ருசித்து குடித்த நாட்கள் நெஞ்சில் நீங்கா பொன்னாட்கள். .
நடந்தது திருமணம் எனக்கும்தான்
மாறியது எல்லாம் அடியோடுதான்
கதிரவன் வருமுன் கண் விழித்து
காப்பியுடன், சிற்றுண்டி, மதிய உணவு
எல்லாம் சமைத்து முடித்த பின்னே
ஒரு கையில் கைப்பையை எடுத்து
மறுகையில் என் பிரிய அருந்திரவம்,
ஓடிக்கொண்டே அதை முழுங்கி
வேலைக்கு விரையும் இந்நாளில்
ஒரு கணம் வந்து போகும் அந்நாளின் நினைவலைகள்.