கல்யாணம் செய்தவளைக் காதலிக்கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர்வீட்டு ஜன்னலுக்குள் நிலவாக வந்து
=எப்பொழுதும் ஒளிவீசும் அழகொன்று நித்தம்
புதிராக இதயத்தின் கிணற்றுக்குள் வீழ்ந்து
=புலப்படாத கல்லாகக் கிடக்கும்போல் நீயும்
மதிகெட்டு அலையாதே! காதலிக்க வேண்டி
=மௌனத்தால் பேசுவதை விட்டுவிடு .துணிந்து
சுதியோடு லயம்சேர்த்து சுகராகம் பாடு
=சுடுகாடோ பூந்தோப்போ இரண்டிலே ஒன்று.
காதலெனும் போதினிலே கசக்கின்ற வேம்பைக்
=கடித்ததுபோல் முகஞ்சுழிக்கும் காரிகையால் நெஞ்சம்
பேதலித்துப் பித்தாகிப் பிதற்றுகின்ற நீயும்
=பின்வாங்க மனமின்றி பெரும்பாடு படுவாய்.
ஆதலினால் இந்தபழம் புளிக்குமென விட்டு
=அகலாத திடங்கொண்டு உடும்பாகி நின்று
மோதலுக்கு வருகின்ற மூர்க்கமுள்ள பாம்பை
=முத்தமிட வைப்பதுதான் காதலுக்கு அழகு.
சொல்லாமல் வாடுகின்ற காதலுக்கு ஓர்நாள்
=சொர்க்கத்தின் வாசற்படி திறந்திடலாம் பாரு
நில்லாமல் ஓடுகின்ற ஆற்றுநீர் போலே
=நினைவுகளின் நீரோட்டம் நிற்பதற்கு கடலாய்
கொல்லாமல் கொல்லுகின்ற குணவதியின் நெஞ்சில்
=குடியிருக்க இடம்கேட்டும் அடம்பிடித்து விட்டால்
கல்யாணம் செய்தவளைக் காதலிக்க லாமே
=கட்டாயம் நீயவளின் கணவனாகிக் கொண்டு.
*மெய்யன் நடராஜ்