மூத்தோர் சொல்லே மந்திரம்

மூத்தோர் சொல்லே மந்திரம்!
-------------
அந்தச் சாலை, சோலைக்குள் புகுந்து பாம்புபோல் வளைந்து வளைந்து செல்வதைப் பார்க்க அழகாக இருக்கும். உல்லாசப் பயணிகள், சாலை ஓரத்தில் கார் வேன்களை நிறுத்தி இயற்கை அழகை ரசிப்பார்கள். அச்சாலை ஓரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பயணிகள் வீசும் பழங்களையும், தின்பண்டங்களையும் உண்டு வாழ்ந்து வந்தன.

எல்லா குரங்குகளுக்கும் சிங்கராசன் என்ற குரங்கு தலைவனாக இருந்து வந்தது. எல்லா குரங்குகளும் சிங்கராசனின் சொல்லைக் கேட்கும். ஒரு சிலவற்றைத் தவிர. சாலையோரம் ஒரு வாகனம் நின்றால் போதும். ஐந்து, ஆறு குரங்குகள் ஒன்று சேர்ந்து பயணிகளை மிரட்டி உணவுப் பொருள்களைப் பறித்து விடும். இவைகளின் போக்கு சிங்கராசுக்குப் பிடிக்காது.

மேலும், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும், விரைவாக வரும் வண்டிகளைத் தாண்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் சில பலியாவதும் உண்டு.

ஒரு நாள்…

ஒரு உல்லாசப் பயண வண்டி சாலையோரமாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கி இயற்கைக் காட்சியைக் கண்டுகளித்தனர். அச்சமயம் பார்த்து, இரண்டு மூன்று குரங்குகள் வண்டிக்குள் புகுந்து தின்பண்டங்கள் மற்றும் பால்பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறின.

காட்டுக்குள் சென்று மற்ற குரங்குகளுக்கும் கொடுத்தன. சிங்கராசு எதையும் வாங்க மறுத்தது. உடனே அது, “”தம்பி, தங்கைகளே! மற்றவர் விருப்பப்பட்டு கொடுத்தால் தான் எப்பொருளையும் வாங்கித் தின்ன வேண்டும். இப்படி குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பாட்டிலைக் கூட எடுத்து வந்து விட்டீர்களே! குழந்தைகள் வயிற்றில் அடிப்பது பாவமல்லவா?” என்று கூறியது.

இதைக் கேட்ட காளி எனும் குரங்கு, “”ஓ! மனிதர்களுக்குப் பரிந்து பேசுகிறீர்களா? நம்மீது மனிதர்கள் பரிதாபப் படுகிறார்களா? கல்லெறிந்து துரத்துகிறார்களே! சும்மா இருங்கள்…” என்று அலட்சியமாக முறுக்கைக் கடித்துக் கொண்டே சொன்னது. சிங்கராசு மனம் நொந்தது!

“”தம்பி! எந்த நற்செயலுக்கும் பின்னால் நல்ல பலனுண்டு. எந்தக் கெட்ட காரியத்துக்கும் தீய பலன் இருக்கும். புரிந்து கொள்வாய் விரைவில்” என்றது.

“”ஹா… ஹா… ஹா..!” என்று சிங்கராசைப் பார்த்து எள்ளி நகையாடின குரங்குகள். “”கிழடு ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும். வாருங்கள் விளையாடலாம்” என்று சாலைக்கு கூட்டமாகக் கிளம்பின குரங்குகள்.

அடுத்த நாள்…! காளி சொன்னது, “”டேய்… துருவா! இந்த ரோட்டை ஐந்து நிமிடத்திற்குள் யார் அதிகமாகத் தாண்டுகிறார்கள் என்று பார்ப்போமா? அதிகம் தாண்டுபவர் தான் அடுத்தத் தலைவர். இனி சிங்கராசு வேண்டாம்” என்றது.

போட்டியின் நடுவராக மயிலன் எனும் குரங்கு இருந்தது. “”தாண்டுங்கள்…! ஒன்று… இரண்டு… மூன்று…” என்று மயிலன் போட்டியை ஆரம்பித்து வைத்தது. முடிவில் காடன் என்ற குரங்கு நூற்றுத் தொண்ணூறு முறை ஓடி வெற்றிப் பெற்றது.

“”காடனுக்கு ஜே!” என்று எல்லா குரங்களும் முழக்கமிட்டன. “”இனி காடன் தான் நம் தலைவர்” என்று அதைத் தூக்கிக் கொண்டாடின. சிங்கராசு மவுனமாக இருந்தது.

அச்சமயத்தில்…

வேகமாக வந்த கார் குரங்கு கூட்டத்தின் மீது மோத, சில குரங்குகளுக்கு அடிபட்டன. சில தப்பித்து ஓடின.
ஆனால்… துரதிருஷ்டவசமாக காளி அடிபட்டு இறந்தது. மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. காளியைப் பார்த்துக் குரங்குகள் கதறி அழுதன.

இதைக் கவனித்த சிங்கராசு, “”ஐயோ! காளி இறந்து விட்டதே… நான் சொன்னதைக் கேட்காமல்… சே, இப்படியா ஆக வேண்டும்” என்று நினைத்து கண்ணீர் விட்டது.

“”சிங்கராசு அண்ணே! வயதில் மூத்தவர் சொல்லை மீறினால் இப்படித்தான் நடக்கும் என்பது உண்மையாகிவிட்டது. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று சிங்கராசுவின் காலில் விழுந்தன குரங்குகள்.

“”தம்பி, தங்கைகளே! இனி இந்தச் சாலை நமக்குவேண்டாம். சோலைக்குள் சென்று சுதந்திரமாக வாழ்வோம். வாருங்கள்!” என்று கூறிய தலைவன் சிங்கராசுவின் சொல்லைக் கேட்டு, காட்டுக்குள் சென்றன அனைத்துக் குரங்குகளும்.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 3:03 pm)
பார்வை : 1027

மேலே