அஜ்ஜிக் கதைகள்

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (2-Nov-15, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே