கனவினில் காதலிக்க கூடாதென்று - சகா

காதலித்துப்பார், கனவினில்

நிகழ்வினில் தெரியா
நிழல் கூட
நின்று பேசிவிட்டுச் செல்லும்...

தூரத் தெரியும்
மேகம் கூட
தலையில் தூறல் விட்டுச் செல்லும்...

கூரை கிழிக்கும்
காற்று கூட
உன் காதில்
காதல் கானம் பாடி விட்டுச் செல்லும்...

அடித்துப் புரட்டும்
அலைகள் கூட
உன் அடிக்கால் வருடி
குறும்பு செய்து விட்டுச் செல்லும்...

மேகத் தாவணியில் முகம் புதைத்திருக்கும்
நிலா கூட
உன்னவள் போல்
உன் கண்ணில் முத்தமிட்டுச் செல்லும்...

உன்னவள் ஊதித் தள்ளிய
நுரை பலூன் கூட
உலக உருண்டையாய்
உன் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளும்...

உன் இதயம் மிரட்டும்
இரவின் இருள் கூட
இளம் மாலை வெளிச்சமாகும்...

கனவு கூட கலர் புல்லாய் மாறும்...

யார் சொல்வார் உனை?
கனவினில் காதலிக்க கூடாதென்று...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (7-Nov-15, 1:08 pm)
பார்வை : 299

மேலே