குழந்தைத் தொழிலாளர்

குழந்தைத் தொழிலாளர்
பாவலர் கருமலைத்தமிழாழன்

கதிர்முளைத்து வருமுன்னே கண்வி ழித்துக்
---கலையாத தூக்கமுடன் உடலும் சோர்ந்து
முதிராத மனங்களிலே சுமையைத் தாங்கி
---மூண்டுவரும் பசிநெருப்பைத் தணிப்ப தற்கே
சுதிசேர்த்துப் பெற்றோரின் வறுமைப் பாட்டின்
---சுருதியாக உடன்பாடச் செல்லு கின்ற
கதியில்லா இளஞ்சிறார்கள் பாடு தன்னைக்
---கண்கொண்டு பார்ப்பவர்கள் யாரே உள்ளார் !

அழகான சீருடையில் அகவை யொத்த
---அருஞ்சிறார்கள் பள்ளிசெல்லும் காட்சி கண்டே
நிழலான வறுமையினால் குடிசைக் குள்ளே
---நின்றவனோ ஏக்கத்தில் சாம்பு கின்றான்
குழவியர்க்குக் கட்டாயக் கல்வி யென்றே
---குறித்துள்ள சட்டங்கள் இங்கி ருந்தும்
விழலுக்கே இறைக்கும்நீர் போல வன்றோ
---விதிகளெல்லாம் செயலின்றித் தூங்கு திங்கே !

நூல்களினைச் சுமக்கின்ற பிஞ்சுக் கையால்
---நுழைந்துள்ள ஏழ்மையினால் மண்சு மந்து
கால்தேயச் சிற்றாளாய்க் கல்சு மந்து
---கந்தகத்தை உடல்சுமந்து மேனி யெல்லாம்
தோல்கறுக்கச் சூரியனின் வெயில் சுமந்து
---துவளுகின்ற சோர்வுதனை மனம் சுமந்து
பால்முகமோ பரிதாப முகமாய் மாறப்
---பாரத்தைச் சுமக்கின்றார் சமுதா யத்தால் !

பிஞ்சுவிரல் அவெழுதிக் கல்வி கற்கப்
----புத்தகங்கள் புரட்டுகின்ற வயதில் தீயாய்
நஞ்சுமிழும் வறுமையெனும் கொடுமை போக்க
---நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கு கின்றார்
பஞ்செனவே பறந்துவிளை யாடு கின்ற
---பருவத்தில் நான்குசுவர்க் கட்ட டத்துள்
குஞ்சுகளாய்ச் சிறகிருந்தும் விரிந்தி டாமல்
---குமைகின்றார் ஏழ்மையினால் உடலு ழைத்தே !

மத்தாப்பூ சிரிப்புதிர வகுப்ப றையில்
---மகிழ்ச்சியுடன் குறும்புபல செய்து கல்வி
முத்துகளை ஆசிரியர் கோத்த ளிக்க
---முகிழ்க்கின்ற அறிவுமாலை அணியும் காலம்
சித்திரமாய் அமர்ந்துவிரல் மருந்தை அள்ளச்
---சிதறுகின்ற பட்டாசு செய்யு கின்றார்
சொத்தாக வறுமையினைப் பெற்ற தாலே
---சொத்தையாகி வேகின்றார் தொழிற் கூடத்தில் !

சொல்லமுதாய் நாபேசிச் சிறக டித்தே
---சுதந்திரமாய்ப் பறக்கின்ற பள்ளிக் காலம்
கல்லுடைக்கும் அடிமையராய் மலையின் ஓரம்
---காட்டிற்குள் மறைவாக வாடு கின்றார்
சொல்லிழந்து கைகட்டிப் பண்ணை வீட்டில்
---கொத்தடிமை யாய்அப்பன் கடனுக் காகக்
புல்வெட்டி மாடுமேய்த்தே புதரைப் போலப்
---புரியாமல் அடிமாடாய் வாழு கின்றார் !

சாலையிலே தாள்பொறுக்கி வீடு கட்குச்
---செய்தித்தாள் எடுத்தேகிப் பலரின் வீட்டில்
காலையிலே வீட்டுவேலை துணிது வைத்துக்
---கடைகளிலே எடுபிடியாய் வேலை செய்து
பாலையிலே காணுகின்ற கானல் நீராய்ப்
---பகற்கனவில் எதிர்கால வாழ்வை எண்ணி
நாளையிந்த நாடாளும் சிறார்க ளெல்லாம்
---நாளெல்லாம் உழைக்கின்றார் கல்வி யின்றி !

சேய்களுக்குக் கட்டாயக் கல்வி என்னும்
---செயல்பாட்டில் கடுஞ்சட்டம் வருதல் வேண்டும்
தாய்தந்தை படும்துயரைக் களையு கின்ற
---தகுதிட்டம் அரசிங்கே நடத்த வேண்டும்
வாய்ப்பளிக்கும் இலவசங்கள் முறையாச் சென்று
---வளர்கல்வி பெறுதற்கே உதவ வேண்டும்
தூய்மையான தொண்டுள்ள நிறுவ னங்கள்
---துணையாகிக் குழந்தைகளைப் பேண வேண்டும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Nov-15, 5:26 am)
பார்வை : 83

புதிய படைப்புகள்

மேலே