வண்ணப் போட்டி
வானவில்லிற்கும் வண்ண மலர்களுக்கும்
ஒரு போட்டி
போட்டியில் யாருக்கு வாக்கு அதிகம் விழும் என்று ..
வானவில்லே சிறிது நேரத்தில் வண்ணம் கலைந்து
போவீர்கள்
வண்ண மலர்களே சிறிது நேரத்தில் பூமியில்
உதிர்ந்து விடுவீர்கள்
இதற்குள் ஏன் போட்டியும் பூசலும் ?...என்றேன்
எதுவாயினும் உன் முடிவைச் சொல்லிவிட்டுப் போ
இதோ போகிறாளே ..இவளிடம் கேளுங்கள் ...என்றேன்
இவள் பெண் மலர்களை சூடத் தெரிந்தவள்
வான வில்லைப் பார்த்து வண்ணக் கனவு காண்பவள்
இவள் தீர்ப்பு சரியாக இராது.
இதோ நீர் தெளிக்க வருகிறானே தோட்டக் காரன்
இவனைக் கேட்பது தானே ?
இவன் முதலில் எங்கள் நண்பன் . பூமியில் நீரூற்றி
எங்களை வளர்ப்பவன்
வானவில்லை ஏறிட்டும் பார்க்காதவன் .
இவன் எப்படிச் சொல்லுவான் ?
நான் ஏன் என்றேன்
உன் பார்வை சொல்கிறது நீ யாரென்று
மலர்களிலும் நிறங்களிலும் காதல் கொள்பவன்
தன்னை மறப்பவன் ; தன்னை இழப்பவன்
சொல்லில் வல்லவன் சொல்லத் தெரிந்தவன்
சொல்லிப் போ
இவ்வளவு சொன்ன பின் சொல்லத்தான் வேண்டும் .
விண்ணில் வண்ணங்களில் வில் அழகு
வண்ண மலர்கள் பூமிக்கு அழகு -----என்றேன்
ஏற்றோம் கவி நண்பனே ! ---என்றனர்
-----கவின் சாரலன்