​என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 23

நாளும் மாறிடும் கால நிலையும் , நாட்டின் நிலையும் , அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகளால் விளையும் சூழ்நிலையும் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகின்றன ....மனதில்தான் எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன .....அதுதான் இயற்கையின் நியதி என்கிறோம்....சிலர் விதி என்கிறார்கள் ....ஒரு சிலர் காலப்போக்கு என்ற்கிறார்கள் ....எது எப்படியோ நாம் வாழத்தானே வேண்டும் ...எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் ...மன உறுதியும் எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தாலே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .
ஆனால் எத்தனைப் பேரால் இது போன்று இருக்க முடிகிறது . ஆனால் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமே அதுதான் . நல்ல உணவும் , சூழ்நிலையும்தான் மனிதனை வளமுடன் நலமுடன் வாழவைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


ஏதோ விழாக்காலங்களில் , பண்டிகை நாட்களில் கூடுகிறோம் ..கொண்டாடுகிறோம் ....மகிழ்கிறோம் அன்று மட்டும் ....கலைகிறோம் ....மறுபடியும் இயந்திர வாழ்வில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறோம். அதுமட்டுமன்றி தற்கால உணவு முறைகளும் செய்முறைகளும் முற்றிலும் மாறிவிட்டது. மேலும் சுத்தமான உணவும் , பொருட்களும் கிடைப்பதில்லை. காற்றிலும் கலப்படமே. மனித உள்ளங்களிலும் கலப்படமே ....பின்பு எப்படி வாழ்வு சிறக்கும் .....மனிதன் மேம்படுவான் .....தலைமுறை சிறந்து விளங்கும் ....??? அனைத்தும் இப்போது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. காலம்தான் பதில் கூற வேண்டும் . என்னைபோன்றவர்கள் நல்ல மனிதர்கள் வாழ்ந்த காலத்தையும் , நல்ல சூழ்நிலை உருவாகிருந்த காலத்தையும் பார்த்தாகிவிட்டது . ஆனால் அடுத்த தலைமுறை , என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சியில் விண்ணைத் தொட்டாலும் , மண்ணில் மனிதம் மறையத் தொடங்கிவிட்டதே .....நேயத்தின் குரல்வளை நேரிக்கப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கம் நம் அனைவரின் மனதில் எழத்தான் செய்கிறது ....விதைப்பது நல வித்தாக இருந்தால்தானே வளர்ந்து விருட்சமாகி பலருக்கும் நன்மை பயக்கும் சமுதாயத்திற்கும் ....ஆனால் இன்று நிலவும் சூழ்நிலையில் இதனை நினைப்பதற்கு கூட உள்ளங்கள் இல்லையே என்பதால் வருத்தம் தான் வழிகிறது .

தீபாவளி பண்டிகை நம்மை கடந்து சென்றது இரு நாட்களுக்கு முன்னர்தான் ....எவ்வளவு பேர் அதனை மனநிறைவோடு , மகிழ்ச்சியோடு கொண்டாட முடிந்தது என்று நினைத்து பார்த்தால் இதயம் வலிக்கிறது. உள்ளவர்கள் கொண்டாடி இருப்பர் ..உற்சாகத்தின் உச்ச்சத்தோடு ....பலர் வேடிக்கை பார்த்திருப்பார்கள் சோகமுடன் ...இல்லாதவர்கள் ....
மாற்று உடைக்கு கூட வழி இல்லாதார் , பாதையில் வசிக்கும் மிகவும் அடித்தட்டு மக்கள் , வறியவர்கள் , ஆதரவற்றோர் , திக்கற்றோர்கள் , ஏழ்மையைத் தவிர எதுவும் அறியாதவர்கள் , வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பர்வகள் , அவர்களை அனைவரையும் நினைத்துப் பாருங்கள் ..... அவர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் ....உள்ளங்கள் அழுதிருக்கும் ....மனித வாழ்வில்தான் எவ்வளவு வேறுபாடு ....இணைய முடியா விரிசல் ....சமூகத்தில் பலவித பிரிவுகள் ....ஏற்றத் தாழ்வுகள் ....எப்போது விலகும் இவை அனைத்தும் ....என்றுதான் மாறிடும் இந்தக் காலத்தின் கோலங்கள் ......சோகமே என்னை மூழ்கடிக்கிறது விடை தெரியாமல் ...விடை காண முடியாத வினாவாக ....என் முன் நிற்கிறது .

மீண்டும் சந்திக்கிறேன் .....


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Nov-15, 8:55 am)
பார்வை : 298

மேலே