வின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான்
நான்கு திசைகளிலும்
நூலினால் கோர்க்கப்பட்ட காற்றாடியும்,
புழுதிபடிந்த காகிதங்களும்,
மண்ணிலிருந்து விண் நோக்கி
பறப்பதால் பறவை
என்று பெயர் சூட்ட முடியாது.
****
காகமும் கருமைதான்
குயிலும் அதன் சாயலே!!
இருள் வான் மேகம்
கருமை என்பதால் காகம்
கொத்தி கூவச்சொல்வது நியாயமா?
****
தரையில் விழுகின்ற நிழலில்
கீழ்சாதி மனிதனின் கால் பட்டதென
சலவை செய்து கறையை போக்குவது
மதி நுட்பமா? இல்லை பித்தனின்
ஒரு பக்க வாதமா?
****
தென்னங்கள்ளும் புட்டிப்பாலும்
வெண்மை என்பதால்
கைக்குழந்தை பசிக்கு
தென்னங்கள் பாலாகுமா?
குடிகாரனின் போதைக்கு
புட்டிப்பால் மருந்தாகுமா?
****
சாக்கடை நாற்றம் நுகர்ந்து
மூக்கை பொத்தும் மனிதன்
தன் உடல் நாற்றம் அறிந்ததில்லை.
பூக்களின் வாசத்தில் வியந்து
கூந்தலில் சூடும் பாவை
தன் மனதின் அழகை பார்த்ததுமில்லை.
****
தாய் என்றால் அன்பென்று
வார்த்தைக்கு வார்த்தை
சொல்பவனும் அவளை
நோகாமல் காத்ததில்லை.
குருடென்று ஒதுக்கி வைத்தவன்
எந்த பெண்ணின் உடலையும்
ஒளிந்து பார்த்து ரசித்ததுமில்லை.
****
ஐந்தறிவு மிருகமென்றும்
ஆறறிவு மனிதன் என்றும்
வகைப்படுத்தியவன் யாரென்று
எவனுக்கும் தெரியாது.
மண்டை ஓட்டின் மூளையால்
ஞானத்தை வெல் என்றால்
உலகிற்கும் புரியாது.
****