வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 5 நடுவிலிருந்து போகும் கதை

.............................................................................................................................................

இருள் கப்பிக் கிடந்த அந்த வைகறையில் வைத்தியர், மன்னவர், தளபதி என்று மூன்று மாமனிதர்களும் அந்தப்புரத்திற்கு வந்து விட்டனர். வேறு பணிப்பெண்களோ, வீர்ர்களோ அந்த தளத்திலேயே அனுமதிக்கப் படவில்லை. மகாராணியை உடனே தீர்த்தமாடி விட்டு வரச் சொன்ன வைத்தியர் அணிமாவிடம் ராணியின் மஞ்சத்தை பரிசோதிக்கச் சொன்னார்.

ராணியின் படுக்கையில் மூன்று மஞ்சங்கள் இருந்தன. வேறொன்றுமில்லை..!

“ மஞ்சத்தை கிழித்துப் பார் மகளே ” என்றார் வைத்தியர்.

அணிமா கத்தரிக்கோலால் மஞ்சத்தை அறுத்தாள். மேலே மெல்லிய அடுக்காக இலவம் பஞ்சு.. உள்ளே கத்தை கத்தையாகப் பச்சிலைகள்..! பச்சிலைகளின் பச்சை நிறம் பஞ்சுக்கும் பரவியிருந்தது...!

“ அணிமா.. அந்த பச்சிலைகளை தொட்டு விடாதே..! ” வைத்தியர் எச்சரித்தார்.

மன்னன் வெகுண்டான்..! “என்ன வைத்தியரே இது, என் ராணியின் அந்தப்புரத்தில்? ”

“ நான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது” என்றார் வைத்தியர்; தொடர்ந்தார்..

“ மகாராஜா..! இந்த தோழிப் பெண்ணின் மரணம் பச்சிலையால் உண்டாகி இருக்கிறது..! இவள் இடை முடிப்பில் இந்த பொற்காசு மூட்டை கிடைத்தது..! நயவஞ்சகி..! விலை போய் விட்டாள்..! இவள்தான் ராணியாரின் படுக்கைக்குள் பச்சிலைகளை திணித்திருக்க வேண்டும்.! அந்த பச்சிலைகள்தான் இவளைப் பலி வாங்கி விட்டன..!

ராஜனே, இந்த பச்சிலைகளின் வீரியம் சொல்கிறேன்..! உடுப்புத் தாண்டி தோல் வழியாக உடம்புக்குள் ஊடுருவுகின்ற மூலிகைகள் இவை. படுக்கைக்குள் பச்சிலையை அடைத்து ஒரிரு நாழிகை அதில் படுத்திருந்தால் உடல் வலி மறைந்து விடும்; அதாவது வலியை உணர்த்துகின்ற நரம்புகளை இவை மரக்கடித்து விடும். அதே படுக்கையில் இருபது நாழிகைக்கு மேல் படுத்திருந்தால் சுவாசத்துக்குத் துணை புரியும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்து விடும். இதனால் படுத்த நிலையிலேயே மரணம் சம்பவிக்கும்..! நல்ல வேளை, நம் அணிமா தக்க தருணத்தில் கதவை உடைக்காத குறையாகத் தட்டி மகாராணியைக் காப்பாற்றி விட்டாள்..! ! ! ”

மன்னன் அணிமாவை நோக்கினான். பேயறைந்தாற் போல் நின்று கொண்டிருந்தாள் அணிமா. ராணி சயன அறையை விட்டு வெளியேறினால் ஆபத்து என்றான் மணிமாறன்..! உண்மை இப்படி இருக்கிறதே? ஊதுபத்தியின் பயன்படாத உயரம் ஐந்து நாழிகை..! வழக்கமாக எழுந்திரிக்கும் நேரத்தை விட ஐந்து நாழிகை ராணி படுக்கையிலேயே இருந்திருந்தால்.....? ? ?

மகாராஜன் தன்னை பாராட்டி பேசியது எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. அவர் முத்து மாலையைக் கழற்றி பரிசாக அளித்ததும் கவனத்தில் விழவில்லை. அந்த ஊதுபத்தியில் என்ன சூழ்ச்சி இருக்கிறதோ?

மன்னன் அணிமாவை தனியறைக்கு வரச்செய்தார். வைத்தியரைத் தவிர அனைவரையும் தவிர்த்தார். வைத்தியர் சற்றுத் தள்ளி நின்று கொண்டார்.

அணிமாவின் தேகம் நடுங்கியது- பயத்தால் அல்ல; நடந்ததை நினைத்து..!

நடந்ததை அவள் கூறினாள். அந்த ஊதுபத்தியையும் காட்டினாள். மன்னவன் அதனை ஏற்றச் சொன்னான்- அதாவது மணிமாறன் சொல்படி அந்த ஊதுபத்தியை ஏற்றி வைத்திருந்தால் இந்நேரம் எந்த முனையில் நெருப்பு பற்றியிருக்கும் என்று கணக்கிட்டு ஏற்றச் சொன்னான்.

அணிமா அப்படியே செய்தாள்.. எதையோ யூகித்த மன்னரும், வைத்தியரும் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு சற்றுத் தள்ளி நின்றனர். கள்ளம் கபடமறியாத அணிமா அந்த ஊதுபத்தி வாசனையை நெஞ்சு நிரம்ப முகர்ந்தாள். மன்னன் வைத்தியருக்கு கண் காட்டினான். அதற்குள் அணிமாவின் தேகம் தள்ளாடியது..! ஏதோ லாகிரி..! கண்கள் அப்படியே சுழன்றன. கைகள் வளையோடு மேலாடையையும் கழற்றத் தலைப்பட்டன. மயக்கம்..! மயக்கம்..! வைத்தியரை தள்ளி விட்டு அப்படியே ஓடி வந்தவள் மனையாள் சேராத மன்னவனின் மார்பில் மாலை போல் விழுந்தாள்..! கைகளிரண்டும் மதுரமொழியை அணைத்துக்கொண்டன..! அவள் நெற்றிச் செந்தூரம் மன்னனின் மார்பில் ஒட்டிக் கொண்டது..! அப்படியே மயங்கித் தரையில் சாய்ந்தாள்.

வைத்தியர் ஊதுபத்தியை அணைத்தார். சில மூலிகைகளை அணிமாவின் மூக்கருகில் காட்டினார். அணிமா எழுந்த நேரம், மன்னர் மதுரமொழி சட்டையில் ஒட்டிய செந்தூரத்தை தட்டிக் கொண்டிருந்தார். அது மறையவில்லை. செந்தூரம் பட்ட பாகத்தை உள்ளுக்குள் மடித்து உள்ளே இருந்த துணியை வெளியே இழுத்து வார்க்கச்சையை இறுக்கினார். இவ்வளவையும் மகாராணி கீர்த்திவதனா வருவதற்குள் அவசரமாகச் செய்து முடித்ததை அந்த நேரத்திலும் முதிய வைத்தியர் ரசனையுடன் நோக்கினார்.

அணிமா வெட்கம் தாளாமல் வெளியே மறைந்து விட்டாள். மகாராணி கீர்த்திவதனா நீராடி விட்டு அறைக்குள் நுழைந்தாள். அவள் அணிமாவை உடனழைத்தாள்..!

கீர்த்திவதனாவுக்கு நடந்ததைத் தெரிவித்தார் மன்னர். “ சூழ்ச்சி புரிகிறதா வைத்தியரே? ” என்றார் மிகக் கடுமையான குரலில்..!

“ புரிகிறது மாமன்னரே..! அரசியைக் கொல்லும் பயங்கர சதி இது..! இந்த ஊதுபத்தியை மாத்திரம் அணிமா வைத்திருந்தால் வைகறையில் அந்தப்புரத்திற்கு வருபவர் தங்கள் முகர்வுக்கேற்ப போதையில் கிளர்ந்தோ அல்லது மயங்கியோ விடுவர். இறந்து போன தோழியைக் கூட புத்தி கவனிக்காது..! கொஞ்சம் தெளிவிருக்கிற மாந்தரை தூபக்கடிகை தவறாக வழி நடத்தி விடும்..! அரசி படுக்கையிலேயே இருந்திருப்பார்....! அந்தச் சமயம் பச்சிலை தன் வேலையைக் காட்டியிருக்கும்..! ”

கீர்த்திவதனாவின் செந்நிறச் சாயம் பூசிய உதடுகள் முணுமுணுத்தன.. “ மணிமாறன் என் உடன் பிறவாச் சகோதரன்..! அவனா இப்படி? ”

“ தளபதீ..! ”

மகாராணி இரைந்தாள். பவ்யமாக வந்த தளபதியிடம் “ மணிமாறனை என்னெதிரில் நிறுத்துங்கள்..! அவனை மரியாதையுடனே அழைத்து வாருங்கள்..! ” என்று ஆணையிட்டாள்.

தளபதி மெல்லப் பேசினார்..! “ மகாராணி, அடியவனை மன்னியுங்கள்..! தாங்கள் மன்னரை ஆள்கிறீர்கள்..! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை..! ஆயினும் எம்மை ஆள்வது மன்னரே..! மன்னரின் ஆணையை இன்றி மற்றொருவர் ஆணையை ஏற்பது சேர வீர்ர்களுக்கு வழக்கமில்லை..! ”

தளபதியின் சொற்கள் ராணியைக் கொதிக்கும் தழலாக மாற்றின..!

“ உங்கள் ராணியின் உயிரை உறிஞ்ச சதி நடந்திருக்கிறது..! அதைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை..! உங்களைப் போன்ற தளபதிகள் ஆணையிட்டுத்தான் வேலை செய்ய வேண்டுமா? காத்தல் தொழில் உங்கள் ரத்தத்தில் ஊறியல்லவா இருக்க வேண்டும்? இதில் சந்தர்ப்பம் கிடைக்கிற போது உங்கள் ஆணவத்தைக் காட்டுகிறீர்களா ? ? “

தளபதி விஜயமல்லர், மாமன்னர் கருங்கண் சேரலாதர் காலத்திலிருந்தே தளபதி பொறுப்பில் இருப்பவர். அரசரோடு விழுப்புண்கள் பல பெற்றவர். போர்களைக் கண்டவர்; சதிகளை விண்டவர். கீர்த்திவதனாவை விட இரு மடங்கு வயது மிக்கவர். ஆங்காங்கு நரை தெரிந்த அவருடைய நெடிய கொண்டையில் வைத்திருந்த பட்டத்திலுள்ள மீன் பதக்கம் தெளிவாகப் புலப்படும் நிலையில், இப்போது மௌனமாகத் தலை கவிழ்ந்திருந்தார்.

மன்னர் குறுக்கிட்டார்.

“ தளபதியாரே..! ராணி சொன்னதைப் போல் மணிமாறனை அழைத்து வாருங்கள்..! இந்த விவகாரம் ரகசியமாக நமக்குள் இருக்கட்டும்..! கீர்த்தி..! நீ ராஜகாளியம்மன் கோயிலுக்குப் புறப்படு..! பல்லக்கு வேண்டாம்..! என்னுடன் புரவியில் வா..! ”

தளபதியின் பேச்சால் கொதிப்புற்றிருந்த கீர்த்திவதனா, மன்னரின் உத்தரவால் மனம் மகிழ்ந்தாள்.

உடனே புறப்பட்டாள்.

அவரவர் தத்தம் வேலையைப் பார்க்க முற்பட்டனர்...

அணிமா காத்திருந்தாள்... அன்றிரவு மணிமாறன் வரவில்லை... பாசத்தில் தோய்ந்தெடுத்த மணிமாறனின் வார்த்தைகள்.... ! ராணியின் விழிநீர் அவன் நல்லவன் என்கிறது..! எனில் யார் அவனை இவ்விதம் நம்ப வைத்து கழுத்தறுக்கப் பணித்தது ???

அடுத்த நாள் அணிமாவுக்காக காத்திருந்தது அதிர்ச்சிகரமான செய்தி..!

கீர்த்திவதனாதான் அணிமாவை அழைத்தாள். ராஜ்ஜியத்தின் எல்லையில், தனது வீட்டில் மணிமாறனின் மனைவியும் ஒரு வயதுக் குழந்தையும் கழுத்தறுபட்டுக் கிடந்ததாகவும் மணிமாறன் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும் தெரிவித்தாள்..! ! ! !

கீர்த்திவதனாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது..!
“ மணிமாறனைக் கருவியாக்கி என் மரணத்தை யாரோ நாடியிருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை என்பதால் அவனை, அவன் குடும்பத்தை அழித்திருக்கிறார்கள்.. யார்?? அவர்கள் யார்..?? நீ அறிவாயா சொல்..! “

மகாராணி அணிமாவின் தோள்களைக் குலுக்கினாள்..!

அணிமாவும் கலங்கித்தான் போனாள். “ தாயே.. தங்களிடம் என்ன சொல்லித் தேற்றுவது? ” என்றபடி ராணியின் முதுகை மென்மையாக வருடினாள்.. ! “ தாயே, தாங்கள் ஒரு க்ஷத்திரியப் பெண்..! க்ஷத்திரியப் பெண் இழப்புக்கும் மரணத்துக்கும் துளிக்கூட கலங்கலாகாது..! நாம் கைவிடக்கூடாதது மானத்தையும் துணிவையும் மட்டுமே..! ”

“ இதோ பார்.. அணிமா..! மணிமாறனும் அவன் குடும்பத்தினரும் மரணத்தைத் தழுவியது நேற்று இளங்காலைப் பொழுதில்..! இவை எல்லாம் எதற்கான சூழ்ச்சிகள்? யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்..? ”

அணிமா யோசித்தாள்.. “ நான் பதிலறிந்து சொல்கிறேன் தாயே ! பாணிணி முனிவர்... ! பாணிணி முனிவர் மட்டுமே பதிலறிந்தவர்..! தாம் கலங்காதிருங்கள்..! ”

அவள் பாணிணி முனிவரைச் சந்தித்து இது பற்றி கேட்டாள்..!

சில சோழிகளை உருட்டிய பாணிணி முனிவர் மன்னர் உயிருக்கு ஆபத்து என்று அதிரடியாக அறிவித்தார். சதிகாரர்களை பற்றிச் சொல்கையில் காட்டிலிருக்கும் மீனும், ஆற்றிலிருக்கும் மானும் என்றார்..!

இதைச் சொல்வதற்காக மறுநாள் மகாராணியைத் தேடிச் சென்றாள் அணிமா.

மகாராணியை சந்திக்க இயலவில்லை. ஒரு தோழிப்பெண் வந்தாள். “ அணிமா..! மகாராணியார் சில யவன தேசத்துப் பெண்களுடன் உரையாடலில் உள்ளார். உன்னைப் பார்க்க இயலாத நிலைக்கு வருந்தினார். இருப்பினும் மகாராணியாரே முழு விவரமும் அறிந்து விட்டபடியால் நீ இங்கு காத்திருக்கத் தேவையில்லை என்று சொல்லச் சொன்னார். உன் சேவையை மெச்சி இந்த பொற்காசுகளை அளித்தார்.. அப்புறம் இன்னொரு செய்தி அணிமா...! நீ இனியும் கடிகைக் காப்பாளியாக பணி புரிய வேண்டாம் என்றும் வேறொரு பொறுப்பு தேடி வரும் வரை ஓய்விலிருக்கவும் ஆணையிட்டுள்ளார்..!- இந்தா லிகிதம்..! ”

பொற்காசு முடிச்சையும் லிகிதத்தையும் வாங்கினாள் அணிமா. பொற்காசு கனத்தது – ஏக கனம்..! ! !



தொடரும்
...........................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (13-Nov-15, 2:22 pm)
பார்வை : 216

மேலே