அரும்புகள்

கடல்வழி இலங்கையின் கரைதனை அடைந்தவர்
==கடினமாம் வாழ்வதன் கரைதனை கடக்கவே
அடர்வன மலைகளை அழித்ததில் தேயிலை
==அழகுற வளர்க்கவே அதனுடை பயன்தனை
திடமுடன் அடைந்தவர் திமிருடன் திரிந்திட,.
==துடுப்பினை இழந்ததில் திசைதனை மறந்திடும்
படகென தவித்திடும் பரம்பரை நிதம்நிதம்
==படுந்துயர் முடிவிலாப் பயணமாய் இதுவரை.

அடிக்கிற காத்திலும் அடைமழைக் கூத்திலும்
==அடிபடும் விலங்கினம் அலைவது போலவும்
இடிக்கிற இடியிலும் இடைவிடாக் குளிரிலும்
==இடர்பட நடுக்கிடும் இயற்கைதன் கொடுமையின்
பிடியிலும் உழன்றிடும் பிணியுடன் தினந்தினம்
==பிழைத்திட உழைத்திடும் பிறவியாய் இருந்துமே
மடிவதில் மாத்திரம் மகிழ்வினைக் கண்டிடும்
==மலையக மக்களின் மனத்துயர் தொடர்கதை.

படிக்கிற வயதினில் பனிமலர்த் துளிகளும்
==பறித்திடும் பசுந்தளிர் பசியினை மறைப்பதால்
விடியலை இருளென விருப்புடன் மூடிடும்
==விசித்திரம் நடத்திடும் விதிவழி நடந்திடும்
முடிவிலா கதைக்கொரு முடிவினை வகுத்திட
==முனைபவர் எவருமே முன்வரு வாரிலை
வடித்திடும் நீரதும் வற்றிய விழிகளில்
==வரைபடம் தானவர் வறுமையின் சுவடுகள்.

இடைக்கிடை நடந்திடும் இயற்கையின் அனர்த்தமும்
==இவரது உயிருடன் உடைமைகள் அழித்திட
தடைகளைத் தாண்டிடும் துணிவினை இழப்பதால்
==தரையினில் வீழ்ந்திடும் மீனெனத் துடிப்பரே!
விடையிலாக் கேள்வியாய் வாழ்ந்திடும் நிலைக்கொரு
==விடுதலை அளித்திட விரும்பிடார் மனச்சிறை
உடைபடும் போதிலே உயிர்பெறக் கூடுமே
==உயர்தளிர் கொய்திடும் மலையக அரும்புகள்!

(நூற்றாண்டுகளுக்கு முன்புத் தேயிலை பயிர்செய்கைக்கென தமிழகத்திலிருந்து இலங்கை வந்த பரபரையினர் இன்னும் தேயிலை அரும்புகள் கொய்பவராகப் படுந்துயரின் பரிதாப நிலை)

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Nov-15, 2:43 am)
பார்வை : 118

மேலே