வின் ஞானம்

ஓசோனின் மண்டலத்தில் ஓட்டைப் போட்டு
==உள்ளிழுக்க உயிர்க்காற்றை நீட்டி வையம்
மோசமான வெப்பத்தில் உழல்வ தற்கு
==முயல்கின்ற விஞ்ஞானம் வளர்ந்த தாலே
நாசமாகப் போகுமிந்த நானிலம் நாளை
==நல்லதொரு பாலையென ஆவ தற்கே
சூசகமாய் தொழிற்சாலை எல்லா மிங்கே
==சூழல்மா சடையக்கரும் புகையைக் கக்கும்

சுத்தமற்ற புகைகக்கி விடுதல் மூலம்
==சுவாசிக்கும் காற்றுமிங்கு அமிலம் கொண்டு
வித்தினுள்ளே இருக்கின்ற வம்சத் தன்மை
==வீரியத்தை அழித்தொழித்து புற்கள் தானும்
பத்திரமாய் முளைப்பதற்கு பங்கம் செய்ய
==பார்த்திருக்கும் காலமொன்றை விஞ்ஞா னத்தால்
சத்திரமாய் கட்டிவைத்து விட்ட தாலே
==சாவுமட்டும் வந்தங்கு தங்கிக் கொள்ளும்.

வாழ்தலுக்கு தேவையெனும் நோக்கங் கொண்டு
==வகைவகையாய் கண்டறிந்து கொண்ட தெல்லாம்
சூழ்நிலையால் மாறுமென்று எண்ணா மனிதன்
==சுதந்திரத்தில் தந்திரமாய் தூண்டில் போட்டு
ஆழ்கடலின் மீன்வலைக்கும் கலையாய் இன்றில்
==அனைத்துயிரும் மடிவதற்கு வளர்ந்த கோலம்
கீழ்ப்படிய வைத்திருக்கும் நிலையை வீழ்த்திக்
==கீழடக்கின் அதுஉண்மை விஞ்(win)ஞா னம்தான்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : (15-Nov-15, 2:10 am)
பார்வை : 149

மேலே