ஓர் தேடலும் _ சில வேட்கையும் __ குமரேசன் கிருஷ்ணன்
என் வெற்றிடங்களை நிரப்ப
எவ் விழிகளின் ஒளி
எனை ஈர்க்குமென்று
எங்கெங்கோ பயணிக்கிறேன்...
நான் தேடும் விழிகளும்
எனைத் தேடும் விழிகளும்
சிலமுறை சந்தித்ததுண்டு
சிறு சிறு ஒலியெழுப்பியபடி
சிறகசைக்கும் அப்பறவையின் தேடல்
எனைநோக்கியோ ..?
மரக்கூட்டங்களில் வசிக்கும்
பட்சிகளோடு பரிட்சயமில்லையெனக்கு
என் வீட்டுக் கூரைக்குள்
குடிபுகுந்த பறவைகளுடன்
ரகசியம் பேசியதுண்டு ...பலமுறை
எனைத் தேடி இந்நீண்ட பயணம்
ஏன் பறவையே ..நீ அறிவாயா ..?
என் தேடல் விசித்திரமானது
ஓர் மழைநாளில் ...
பூத்திருக்கும் பூஞ்சணத்தின்
குடைவிரித்த கிளர்ச்சிக்குள்
நான் ...ஒளிந்திருக்கலாம்
ஓர் சாலைகடக்கையில் ...
இலைகளில் மீந்துநிற்கும் நீர்த்திவலைகள்
என் தாகத்தின் வேட்கைக்கு நீரூற்ற
நான் ... உயிர்த்திருக்கலாம்
ஒர் மரத்தின் நிழலில்
இளைப்பாறி காய்கனி உண்டபின்
வேர்களின் விசுவாசத்தைக் காண
நான் ... புதைந்திருக்கலாம்
மின்மினிகளும் ...பொன்வண்டுகளும்
என் விரல்பிடித்து எனை
ஏந்திச்செல்ல கொஞ்சம்
நான் ... மிதந்திருக்கலாம்
ஆனாலும்
என் முகமுரசிய பூக்கள்
என் கண்ணம் பதித்த
எச்சில்களின் தழும்புகள்
இன்னும் ... மிச்சமிருக்கின்றன
வானத்து நிறமெடுத்து
வாசம் கொஞ்சம் கோர்த்து
உடையணிந்து திரிவேன் ...நெடும்நேரம்
வானவில்லும் வந்து வந்து
வசைபாடினாலும் நிறமளிக்கும்
என் ஆடைகளுக்கு ...சிலநேரம்
என்னவளின் முகபிரதிபலிப்பாய்
முழுநிலவும் மேகத்தோடு
முந்திப் பிந்தி விளையாடும் ...பலநேரம்
என்வெற்றிடங்கள் நிரம்பியதாய்
மனக்கிளர்ச்சியுற்ற ஓரிரவில்
எனைத்தழுவும் உறக்கங்களில்
நட்சத்திரக் கூட்டங்கள்
விளக்குகளாய்ப் பரிணமித்திருக்க ...
நான் ... இன்னும்
தொலைந்து போகவுமில்லை
என்னுள்ளே தேடியும்
எனைக் காணவுமில்லை
அவ்வாறெனில்
எங்கிருக்கிறேன் ...நான் ?
-----------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்