அரும்புகள் மலரட்டும்

கல்வி தருவாள் கலைமகள்

கண்ணினும் மேலாம் கல்வி – நமது
கறைகள் களைவது கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்வி – எங்கள்
கவலைகள் போக்கிடும் கல்வி ….. (கண்ணினும்)

அறிவைப் பெருக்கிடும் கல்வி – ஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி – என்றும்
ஈயக் குறையாக் கல்வி ….. (கண்ணினும்)

உலகை உய்த்திடும் கல்வி – நமக்கு
உண்மை உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வது கல்வி – எவரும்
நாடிப் பெறுவது கல்வி ….. (கண்ணினும்)

பல்துறை கொண்டிடும் கல்வி – திறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது கல்வி – எளியோர்
தாழ்வு நீக்குவது கல்வி ….. (கண்ணினும்)


சமயம் வெல்வது கல்வி – வீண்
சாதிகள் கடப்பதும் கல்வி
சமத்துவம் புரிவதும் கல்வி – எதிலும்
சாதனை விளைப்பது கல்வி ….. (கண்ணினும்)

ஏழமை விரட்டிடும் கல்வி – இல்லார்
ஏற்றம் தீட்டிடும் கல்வி
ஞாலம் சுருக்கிடும் கல்வி – உயர்
ஞானம் தருவதும் கல்வி ….. (கண்ணினும்)

சிந்தனை சீர்த்திடும் கல்வி – நம்
சிறுமைகள் தீர்த்திட வேண்டுமே
புலமைகள் நிறைத்திடும் கல்வி – பலபல
புதுமைகள் துலக்கிட வேண்டுமே ….. (கண்ணினும்)

பேதைமை போக்கிடும் கல்வி – நல்ல
மேதைமை வார்த்திட வேண்டுமே
கீழமை விரட்டிடும் கல்வி – இனிய
தோழமை வளர்த்திட வேண்டுமே ….. (கண்ணினும்)

அன்பைப் போதிக்கும் கல்வி – மாந்தருள்
பண்பை வளர்த்திட வேண்டுமே
நாநயம் கற்பிக்கும் கல்வி – நம்மிடை
நாணயம் நாட்டிட வேண்டுமே ….. (கண்ணினும்)

இயற்கை ஆய்ந்திடும் கல்வி – என்றும்
இறைமை உணர்த்திட வேண்டுமே
கல்வியின் நாயகி கலைமகளே – எமக்கு
காலமும் நல்குவாய் நற்கல்வி ….. (கண்ணினும்)

எழுதியவர் : சபா.வடிவேலு (15-Nov-15, 10:44 am)
பார்வை : 85

மேலே