அழகே தமிழே எனதுயிரே
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
=========================
தன்னுயிர் போகும் போதும்
........தண்டமிழ் பாடும் மாந்தர்
பொன்னுடல் எரியும் போதும்
........பூந்தமிழ் வாசம் வீசும்!
என்னுயிர் சுமக்கும் கூட்டில்
........இருந்திடும் ஆசை கோடி!
தொன்மையாம் தமிழைப் பாடிச்
........சூழ்புகழ் காண வேண்டும் !
சுந்தரத் தமிழே உன்னைச்
.......சுமந்திடும் என்றன் நாவில்
மந்திரச் சொல்லாய் நாளும்
.......மகிழ்நிறை வாக்க வேண்டும்!
சிந்துரம் இட்டே நெற்றி
.......சிறப்புறும் மாந்தர் போன்றே
வந்தருள் செய்வாய் தாயே!
.......வளமெலாம் சேர்ப்பாய் நீயே!
கற்றறிந் துலவும் மாந்தர்
.......காரிகை நன்னூல் தம்மால்
பெற்றறிந் தோங்கும் வண்ணம்
.......பிழையறக் காப்பாய் அம்மா!
மற்றறி வோங்க செய்தே
.......மன்பதை வெல்ல வைப்பாய்!
சிற்றறி வழித்தே தூய
....... செந்நெறி ஊட்டு வாயே!
எந்தையும் தாயும் போலும்
.......இணையிலா மக்கள் போலும்
விந்தையாம் உலகைக் காக்கும்
....... வேதியன் அருளைப் போலும்
சிந்தையில் தோன்றும் எல்லாம்
........ செழிப்புற வேண்டும் தாயே!
அந்தமிழ் அமுதை ஊட்டி
........அவனியில் என்னைக் காப்பாய்!